×

மலையில் இருந்து மதுரை புறப்பட்டார் அழகர் இன்று மூன்று மாவடியில் எதிர்சேவை நாளை வைகையில் எழுந்தருளுகிறார்

மதுரை. ஏப். 18: அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் இருந்து மதுரைக்கு அழகர் நேற்று தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். இன்று காலையில் மூன்று மாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சிகள் நடக்கிறது.  
மதுரை அருகே, அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலின் முக்கிய திருவிழாவான சித்திரைப் பெருந்திருவிழா ஏப்.15ல் தொடங்கியது. நேற்று இரவு 7.45 மணிக்கு 18ம் படி கருப்பணசுவாமி கோயில் முன், வையாழியாகி தங்கப்பல்லக்கில் அழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். வழியில் கள்ளந்திரி, அப்பன்திருப்பதி மண்டபங்களில் எழுந்தருளினார். இன்று அதிகாலை 6 மணிக்கு மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்சேவை செய்து அழகரை வரவேற்பார்கள். வழியில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரவு 12 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலில், திருவில்லிபுத்தூர் ஆண்டாளுடைய திருமாலை அணிந்து வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளுவார். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சு நடைபெறும். பின்னர் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அன்று இரவு எழுந்தருளி காட்சி தருகிறார். 20ம் தேதி காலை சேஷ வாகனத்தில் புறப்பட்டு, பின்னர் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தருகிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதாரம் நடைபெறும். 21ம் தேதி அதிகாலை மோகன அவதாரத்தில் அழகர் காட்சி தருகிறார். அன்று பிற்பகல் ராஜ திருக்கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு அன்றிரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும். 22ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர்மலை நோக்கி புறப்படுகிறார். அன்றிரவு அப்பன்திருப்பதி மண்டபத்தில் காட்சிதருகிறார். 23ம் தேதி காலையில் கோயிலுக்குச் சென்று இருப்பிடம் சேருகிறார். ஏப். 24ம் தேதி உற்சவ சாந்தி, மஞ்சள் நீர்சாற்றும் முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

3 ஆயிரம் போலீசார்...
மதுரை மூன்றுமாவடியில் இருந்து நகர் பகுதிக்குள் அழகர் வருவதால், நகர் போலீசார் 2 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். புறநகரில் 2 கூடுதல் எஸ்பிக்கள், 6 டிஎஸ்பிக்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கூடுவர். வழிப்பறி, திருட்டு போன்ற சமூக விரோத செயல்களை தடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதவி கமிஷனர் தலைமையில் 20 பேர் கொண்ட 4 தனிப்படை போலீசாரும் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது.

Tags : Madur ,hill ,city ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!