தர்மபுரி, ஏப்.17: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில், அதிமுக சார்பில், வேட்பாளர் கோவிந்தசாமி போட்டியிடுகிறார். அவருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர். நேற்று கோவிந்தசாமியை ஆதரித்து, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது, டூவீலர் பேரணி கடத்தூரில் தொடங்கி, பொம்மிடி, துறிஞ்சிப்பட்டி, மோளையானூர், பாப்பிரெட்டிப்பட்டியில் முடிந்தது.
இறுதிக்கட்ட பிரசாரத்தின் போது அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசுகையில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கோவிந்தசாமியை, இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து எம்எல்ஏவாக தேர்வு செய்தால், தொகுதி மக்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டவராக கடமையாற்றுவார். தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை பொதியன்பள்ளம் அணைக்கட்டிற்கு கொண்டுவர பாடுபடுவார். மேலும், வாணியாறு அணையின் வலது, இடதுபுற கால்வாய்களை நீட்டிக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில், ஒன்றிய செயலாளர் விசுவநாதன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.