×

ஜனவரி 25ஐ மறவாதே.... ஆளும்கட்சிக்கு வேட்டு வைக்கும் ஆசிரியர்களின் வாட்ஸ்அப் தகவல் கலக்கத்தில் அதிமுகவினர்

காரைக்குடி, ஏப்.17: ஜனவரி 25ம் தேதி நடந்ததை மறக்காமல் வாக்களிக்க வேண்டும் என ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலம் சக ஆசிரியர்களுக்கு அனுப்பும் தகவல்கள் ஆளும்கட்சி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில் ஆசிரியர்கள் மட்டும் 6 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இருப்பார்கள். கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 1111 பேருக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை தண்டனை ரத்து செய்யப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட 7 நாட்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. சஸ்பெண்ட் செய்யப்பட்ட  23 நாட்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. பல ஒன்றியங்களில் தண்டனையாக கட்டாய பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் ஆளும்கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் குறித்து எந்த ஒரு வாக்குறுதியும் தரப்படவில்லை இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடையே அரசின் மீது நம்பகமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இதனை மனதில் வைத்து ஆசிரியர்கள் தங்கள் வாட்ஸ்அப்பில் தகவலை அனுப்பி வருகின்றனர். அதில், இக்கல்வியாண்டில் நாம் இழந்து போன, இழந்து கொண்டிருக்கின்ற உரிமைகளுக்காக நடுவீதியில் நாட்கணக்காய் நீதி கேட்டு போராடியும், கேட்க நாதியற்று போனதை மறந்து விடாதே. பட்ட அவமானங்கள், தண்டனைகள், ஊதிய இழப்புகள் அனைத்தும் அனைவரின் நெஞ்சத்தையும் இன்னும் கூர்வாள் கொண்டு ரத்தம் வழிய குத்திக் குதறிக் கொண்டிருக்கிறது.

அனைத்தையும் மறவாதே. எதையும் மறவாதே. இந்த தேர்தல் உனக்கான பழி தீர்க்க  ஓர் வாய்ப்பு. உன்னைச் சார்ந்த உன் உறவினர்களுக்கும் ஒரு வாய்ப்பு. எனவே உனது வாக்கினை உன் வாழ்வுக்கான வழியாய் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்லதெரு ஆட்சியை தேர்வு செய்ய வேண்டும். இழந்த உரிமையை பெற்றிடு. ஜனவரி 25ஐ மறவாதே என்ற தகவல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வாட்ஸ் அப் தகவல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இது ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் அதிமுகவினர் கலக்கத்தில் உள்ளனர். 

Tags : AUTHORS ,
× RELATED குரூப்-1 தேர்வு எழுதியவர்களிடம் அரசு...