×

வைத்திலிங்கம் மத்தியமைச்சரானால் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவார்

புதுச்சேரி, ஏப். 17: புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் சார்பில் நேற்று காலை புதுச்சேரி முழுவதும் இருசக்கர வாகன பிரசாரம் நடந்தது. மின்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம், சின்ன மணிக்கூண்டு, நேரு வீதி- காந்தி வீதி சந்திப்பு, அஜந்தா, முத்தியால்பேட்டை மார்க்கெட், லாஸ்பேட்டை ஐயனார் கோயில், தட்டாஞ்சாவடி விநாயகர் கோயில், ஜிப்மர், மேட்டுப்பாளையம் சந்திப்பு, கதிர்காமம், லெனின் வீதி சந்திப்பு, புதிய பஸ் நிலையம், நெல்லித்தோப்பு மார்க்கெட், காராமணிகுப்பம் வழியாக முதலியார்பேட்டை வானொலி திடலில் நிறைவடைந்தது. இதில் முதல்வர் நாராயணசாமி, வேட்பாளர் வைத்திலிங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
பிரசாரத்தில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:அரசு நிர்வாகத்தை செயல்பட விடாமல் கவர்னர் தினமும் தடுத்து வருகிறார்.மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு எதுவும் கிடைக்காது. மின்துறை ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கோப்புகளை அனுப்பியும் கவர்னர் பல கேள்விகளை கேட்டு திருப்பி அனுப்புகிறார்.

புதுச்சேரியில் அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்க கவர்னர் வேலை செய்கிறார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க புதுச்சேரியில் மாற்றம் வர வேண்டும். மோடி தூக்கி எறியப்பட வேண்டும். ராகுல்காந்தி பிரதமராக வேண்டும். அதற்கு வைத்திலிங்கத்துக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும். வைத்திலிங்கம் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராகி புதுச்சேரி மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய எல்லா வளர்ச்சி திட்டங்களையும் நிறைவேற்றுவார். ராகுலுடன் இணைந்து இதனை அவர் செய்வார். வீட்டுவரியை 25 சதவீதம் குறைப்பதற்கான கோப்பை கவர்னருக்கு அனுப்பினால், அதை திருப்பி அனுப்பும் அராஜக செயலை செய்கிறார். இதற்கு உறுதுணையாக என்ஆர் காங்கிரஸ் இருக்கிறது. புதுச்சேரி வளர்ச்சிக்காக, நன்மைக்காக, கடன் தள்ளுபடி செய்ய, மாநில அந்தஸ்து பெற, நீட் தேர்வு ரத்து செய்ய, விவசாய கடன் தள்ளுபடி செய்ய, குப்பை வரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணத்தை குறைக்க கை சின்னத்துக்கு ஆதரவளிக்க வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், தட்டாஞ்சாவடியில் திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு உதயசூரியனுக்கு வாக்களிக்க கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Waitingham ,government ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை