×

மின் மீட்டரில் ஊழல் செய்த காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்

புதுச்சேரி, ஏப். 17: புதுச்சேரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியை ஆதரித்து என்ஆர் காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி, அதிமுக எம்எல்ஏ அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று மாலை உப்பளம் தொகுதியில் திறந்த வேனில் சென்று ஜக்கு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். அப்போது அன்பழகன் எம்எல்ஏ பேசியதாவது:புதுவையில் கடந்த மூன்று ஆண்டுகளில் சிறுபான்மை மக்களில் ஒருவருக்கு கூட ஏன் கடன் உதவி அளிக்கவில்லை. அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டதா? சிறுபான்மை கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு மானிய நிதி உதவியை ஏன் வழங்கவில்லை. 3 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி பட்ஜெட் நிதி ஒதுக்கீடு ஏன் செய்யவில்லை.

சீன நாட்டில் இருந்து டிஜிட்டல் மீட்டர் வாங்கி வீடுகளில் பொருத்தி ஏழை மக்கள் பாதிக்கும் வகையில் பல மடங்கு மின் கட்டணத்தை புதுவை காங்கிரஸ் அரசு உயர்த்தியது. நல்ல நிலையில் உள்ள மீட்டர்களை மாற்றி, ஏழை எளிய மக்கள் வீடுகளில் டிஜிட்டல் மீட்டர்களை பொருத்த வேண்டிய அவசியம் என்ன? ரூ.1,500க்கு நல்ல மீட்டர்கள் உள்ள நிலையில் ரூ.14 ஆயிரம் கொடுத்து வெளிநாட்டிலிருந்து டிஜிட்டல் மீட்டர் கமிஷனுக்காக வாங்குவது எந்த விதத்தில் நியாயம். டிஜிட்டல் மீட்டர் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் ஊழல், முறைகேடு நடந்துள்ளது. இதை முதல்வர் மறுப்பாரா? ஆகையால் 3 ஆண்டுகால அலங்கோல காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டாமா? எனவே வரும் தேர்தலில் ஜக்கு சின்னத்தில் வாக்களித்து காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மீனவரணி செயலாளர் ஞானவேல், தொகுதி கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில அம்மா பேரவை துணை செயலாளர் சுரேஷ், மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஆசிரியர் கணேசன், அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் மோகன்தாஸ், உப்பளம் தொகுதி தலைவர் சவரிநாதன், பொதுக்குழு உறுப்பினர் வீரம்மாள், புதுச்சேரி நகர மேலவை பிரதிநிதி சிவா, வார்டு கழக செயலாளர்கள் கிருஷ்ணராஜ், செல்வம், கிருஷ்ணமூர்த்தி, அகமது, உப்பளம் தொகுதி நிர்வாகிகள் துரை, குணா, சக்திவேல், ஜெயராமன், மதிவாணன், பிரகாஷ், அருள், இளங்கோ, கருணாகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : Congress ,electorate ,
× RELATED நெல்லை காங்கிரஸ் பிரமுகர்...