×

சித்திரை மாதம் இன்று பிறப்பு குமரியில் கோயில்கள், வீடுகளில் விஷூ கணி தரிசனம்

நாகர்கோவில், ஏப்.14 :  சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்கள், வீடுகளில் விஷூ கணி தரிசன நிகழ்ச்சி இன்று நடக்கிறது. தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதம் இன்று (14ம் தேதி) பிறக்கிறது. குமரி மாவட்டத்தில் சித்திரை மாத பிறப்பு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கோயில்களில் பழ வகைகள், காய்கறிகள் படைத்து வழிபாடு நடத்துவார்கள். வீடுகளிலும் பூஜை அறைகளில் காய், கனிகளை படைத்து வழிபடுவர்.  அதே போல் இன்று சித்திரை மாத பிறப்பையொட்டி வீடுகளில் வெண்கலத்தால் ஆன உருளி பாத்திரம் அல்லது அகன்ற வெண்கல தட்டில் அரிசியும், நெல்லும் பாதி நிரப்பி அதன் மீது ஜரிகையுடன் கூடிய புதிய வேஷ்டி, தங்க நகை, முகம் பார்க்கும் கண்ணாடி, கணி வெள்ளரி (மஞ்சள் நிறத்தில் உள்ளது), கணிக்கொன்றை பூக்கள், வெற்றிலை, பாக்கு, குங்குமம், எலுமிச்சைப்பழம், உடைத்த தேங்காய் ஆகியவற்றை வைத்து , இன்று  அதிகாலையில் எழுந்ததும், அதை கும்பிட்டு வணங்குவார்கள். இவ்வாறு செய்வதால், இந்த ஆண்டு முழுவதும் வீட்டில் ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கும். நாட்டின் மழை வளம், மண் வளம் செழிக்கும் என்பது நம்பிக்கை.  பின்னர் வீட்டில் உள்ள பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கி, கை நீட்டம் பெற்று ஆசி வாங்குவார்கள். புத்தாடை அணிந்து கோயில்களுக்கு சென்று வழிபடுவார்கள்.

சித்திரை பிறப்பையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில், நடுகாட்டு இசக்கியம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குமாரகோவில் முருகன் கோயில், வெள்ளிமலை முருகன் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் கை நீட்டமும் வழங்கப்படும். சுசீந்திரம் கோயிலில் நாளை விஷூ கணி தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.  சித்திரை பிறப்பையொட்டி மார்க்கெட்டுகளில் பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை நேற்று காலையில் இருந்து சூடுபிடித்தது. வடசேரி சந்தை அருகே சாலை ஓரத்தில் ஏராளமான பழக்கடைகள், பூக்கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. பழங்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து இருந்தன.

Tags : birthplace ,temples ,Vishu ,houses ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா