×

சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணி தீவிரம்

ஈரோடு, ஏப். 12: ஈரோடு மக்களவை தொகுதிக்கான தேர்தலில் வாக்குகள் எண்ணும் மையம் சித்தோடு அருகே ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படுகிறது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகள் ஈரோடு மக்களவை தொகுதியிலும், பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி ஆகிய தொகுதிகளில் திருப்பூர் மக்களவை தொகுதியிலும், பவானிசாகர் தொகுதி நீலகிரி மக்களவை தொகுதியிலும் உள்ளது. ஈரோடு மக்களவை தொகுதியை பொருத்தவரை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகள் தவிர நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் தொகுதியும், திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம் தொகுதியும் உள்ளது. இந்த தேர்தலில் ஈரோடு மக்களவை தொகுதியில் நோட்டாவுடன் சேர்த்து 21 பேர் போட்டியிடவுள்ளதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

மற்ற தொகுதிகளில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குகளை எண்ணுவதற்காக ஈரோடு மக்களவை தொகுதிக்கு சித்தோடு அருகே ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியும், திருப்பூர் மக்களவை தொகுதிக்கு கோபி கலை கல்லூரியும் வாக்கு எண்ணும் மையங்களாக அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கயம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 18ம் தேதி வாக்குப்பதிவிற்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.இதற்காக சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அமரும் பகுதி, வேட்பாளர்களின் முகவர்கள் அமரும் இடங்கள், வாக்கு எண்ணிக்கையை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் இடம் என ஒவ்வொரு இடமாக தேர்வு செய்யப்பட்டு அங்கு கம்பி வலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

தேர்தலுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வந்து வைக்கப்படும் அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ம்தேதி நடைபெற உள்ளதால் அதுவரை வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், `மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 213 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளது. இதில் ஈரோடு மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான இடங்களை ஒதுக்குவது, வேட்பாளரின் ஏஜென்டுகள் அமரும் இடம், அதிகாரிகள் அமரும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகள் பாதுகாப்பாக உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும்’ என்றனர்.

Tags : vote count center ,IRDT Engineering College ,Chittu ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் போதையில்...