×

தேர்தலில் யாருக்கும் ஆதரவாக போலீசார் செயல்பட கூடாது

வில்லியனூர், ஏப். 11: மக்களவை தேர்தலை முன்னிட்டு டிஜிபி சுந்தரி நந்தா வில்லியனூர் மற்றும் மங்கலம் காவல் நிலையங்களில் திடீரென நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவல் நிலையத்தில் குற்றவாளிகளின் பதிவேடுகள் குறித்து விசாரித்தார். தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எஸ்பி ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் பழனிவேல் ஆகியோரிடம் விசாரித்தார். பிறகு, மக்களவை தேர்தலில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேர்மையாக செயல்பட வேண்டும், யாருக்கும் ஆதரவாகவும் ஒரு தலைபட்சமாகவும் செயல்பட கூடாது. முறைகேடுகள் நடக்காமல் இருக்க விழிப்புடன் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றார். மேலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து விளக்கினார். பின்னர் கரிக்கலாம்பாக்கம் காவல் நிலையம் சென்றார். தொடர்ந்து, வில்லியனூர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், கதிரேசன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

திருக்கனூர்: திருக்கனூர் அடுத்த மண்ணாடிப்பட்டில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியை டிஜிபி சுந்தரி நந்தா நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, தமிழகம் - புதுவை எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளை ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த அதிகாரிகளிடம் வாகன சோதனை பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அங்கிருந்து புறப்பட்டு திருக்கனூர் காவல் நிலையத்துக்கு சென்ற அவருக்கு, போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். தேர்தல் நேரத்தில் கவனமாக பணியாற்றவும், அதிக நேரம் உழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தற்போது மகளிர் போலீசாரே சோதனைச்சாவடியில் பணியாற்றுவது பெருமையாக உள்ளது. காவலர்களுக்கான சிறப்பு ஊதியம் உடனே வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் டிஜிபி கூறினார். அப்போது மேற்கு எஸ்பி ரங்கநாதன், போக்குவரத்து எஸ்பி சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம் (போக்குவரத்து), ராஜ்குமார் (திருக்கனூர்), சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலு, குமார், முருகானந்தம் உள்ளிட்டோார் உடனிருந்தனர். இதேபோல், நெட்டப்பாக்கம் காவல்நிலையம், சோதனைச்சாவடி, வாக்குச்சாவடிகளுக்கு சென்று டிஜிபி ஆய்வு செய்தார்.

Tags : election ,anyone ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு...