×

ரூ. 8.66 கோடிக்கு டெண்டர் விட்டும் உக்கடத்தில் உயர் மின்கோபுரம் அகற்றும் பணிகள் தாமதம்

கோவை, ஏப்.10: கோவை உக்கடத்தில் உயர் ேகாபுர மின் கம்பங்களை அகற்றாததால் மேம்பால பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கோவை உக்கடத்தில் 2.7 ஏக்கர் பரப்பில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கிருந்து கோவையின் பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்களும், வடக்கு பகுதிக்கு விரைவு பஸ்களும், கேரள மாநிலத்திற்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. உக்கடத்தில் இருந்து பாலக்காடு மெயின் ரோடு, பொள்ளாச்சி மெயின் ரோட்டிற்கு வாகனங்கள் சென்று வருகிறது. கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த ரோட்டில் 1.9 கி.மீ தூரத்திற்கு 215 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது.   மேம்பால பணி துவங்கி ஒரு ஆண்டாகியும் இங்குள்ள உயர் மின்ேகாபுர கம்பங்கள் அகற்றப்படவில்லை. இதுவரை 30 தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 55 தாங்கு தூண் அமைக்கவேண்டியுள்ளது. மின் கம்பங்களை அகற்றினால் மட்டுமே 25 தாங்கு தூண்களை அமைக்க முடியும் என்ற நிலையிருக்கிறது. சுங்கம் மற்றும் செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உயர், தாழ்வழுத்த மின்கம்பங்கள் இருக்கிறது. இவற்றை அகற்ற மின் தடை செய்யவேண்டியுள்ளது. 80 அடி உயரமுள்ள 15 மின் கோபுரங்களை அகற்றி விட்டு, மின் கேபிள்களை நிலத்தில் பதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   மின் கோபுரங்களை அகற்றும் போதும், நிலத்தில் பதிக்கும் போதும் மாற்று பாதையில் வாகனங்களை இயக்கவேண்டியிருக்கும். மின் தடை செய்து பிரமாண்டமான மின் கோபுரங்களை அகற்றுவதில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது. மின் கோபுரங்களை அகற்ற நிலத்தடி மின் ஒயர்களை பதிக்க 8.66 கோடி ரூபாய் செலவில் டெண்டர் விடப்பட்டது. ஆனால் பணிகள் இதுவரை துவக்கப்படவில்லை.    மின் கோபுரம் அகற்றும் பணி துவங்காததால் உக்கடம் பஸ் ஸ்டாண்ட், செல்வபுரம் ரோடு மற்றும் சுங்கம் பைபாஸ் ரோட்டை ஒட்டியுள்ள இடங்களில் மேம்பால பணிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மின் ேகாபுர பணிகளை  மாநில நெடுஞ்சாலை நிர்வாகம், மின் வாரியத்திடம் ஒப்படைக்க முன் வந்தது. மின் வாரியம் பணிகளை நடத்த முன் வரவில்லை. இந்நிலையில் பணிகள் நடத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு நெடுஞ்சாலைத்துறை கோரிக்கை விடுத்தது. மின் பணிகள் இதுவரை நடத்தியதில்லை எனக்கூறி மாநகராட்சி நிர்வாகம் மறுத்து விட்டது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமே டெண்டர் விட்டு மின் பணிகளை நடத்த முன் வந்தது. ஆனால் பணிகள் தாமதமாகி வருவதால் மேம்பால பணிகளில் தாமதம் நீடிக்கிறது.

Tags :
× RELATED பைக் ஏற்றி கணவரை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்