×

பட்ஜெட்டில் 99.26 சதவீத நிதியை முழுமையாக செலவு செய்து காங். அரசு சாதனை நலத்திட்டங்களை தடுக்கும் பாஜக

புதுச்சேரி, ஏப். 9:  புதுவையில் நலத்திட்டங்களை காங்கிரஸ் அரசு செயல்படுத்தக் கூடாது என்பதற்காகவே தடுக்கப்படுகிறது. இதன் பின்னணியில் மத்திய பாஜக அரசு உள்ளது என்று முதல்வர் நாராயணசாமி பேசினார். புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதல்வர் நாராயணசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாநிலம் மாகே பிராந்தியத்தில் பிரசாரம் செய்வதற்காக முதல்வர் நாராயணசாமி, வேட்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் மாகே சென்றனர். அங்கு முன்னாள் அமைச்சர் வல்சராஜ் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.

 இதைத் தொடர்ந்து நேற்று முதல்வர் நாராயணசாமி, வேட்பாளர் வைத்திலிங்கத்துடன் திறந்த ஜீப்பில் மாகே, பள்ளூர் பகுதிகளில் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்தார். அப்போது முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: புதுவை மாநிலத்தில் பல்வேறு  இடையூறுகள், முட்டுக்கட்டைகளை கடந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகளை கவர்னர் கிரண்பேடியின் அனுமதிக்கு அனுப்பினால் கோப்புகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகிறது. நலத்திட்டங்களை காங்கிரஸ் அரசு செயல்படுத்தக் கூடாது என்பதற்காகவே தடுக்கப்படுகிறது. இதன் பின்னணியில் மத்திய பாஜக அரசு உள்ளது.

தொடர்ந்து காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடிகள் தருகின்றனர். ஆனால் என்னுடைய அனுபவத்தாலும், அமைச்சர்களின் அனுபவத்தாலும் விடா முயற்சியாலும் தடைகளை தாண்டி, மக்கள் நலத்திட்டங்களை போராடி பெற்று செயல்படுத்தி வருகிறோம். கடந்த ஆட்சியில் பெற்ற கடனை நாம் திருப்பி செலுத்தி வருகிறோம். 2018-19ம் ஆண்டில் ஒதுக்கிய பட்ஜெட்டில் 99.26 நிதியை முழுமையாக செலவு செய்து புதுச்சேரி வரலாற்றில் முக்கிய சாதனையை காங்கிரஸ் அரசு நிகழ்த்தியுள்ளது. புதுச்சேரியில் ரூ.1,850 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், ரூ.500 கோடியில்  பிரெஞ்சு அரசுடன் இணைந்து குடிநீர் திட்டம், 4 பிராந்தியங்களும் வளர்ச்சி பெறும் வகையில் ரூ.200 கோடியில் சுற்றுலா திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ராகுல் பிரதமர்ஆனால், புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும். எனவே, கை சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் வைத்திலிங்கத்தை வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வல்சராஜ் பேசுகையில், `வேட்பாளரான வைத்திலிங்கம் 8 முறை எம்எல்ஏ, சபாநாயகர், அமைச்சர், முதல்வர் என பல பதவிகளை வகித்து திறமையாக செயல்பட்டவர். அவர் ஆட்சிக்காலத்தில் புதுச்சேரி வளர்ச்சிக்கு மட்டுமல்ல, மாகேயின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. மத்தியில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் வைத்திலிங்கம் மத்திய அமைச்சர் ஆவார். இதனால் புதுச்சேரிக்கு மட்டுமல்ல; மாகே பிராந்தியமும் வளர்ச்சி பெறும்’ என்றார்.

Tags : BJP ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...