×

காங். ஆட்சியில் மக்கள் தலையில் வரிச்சுமை

காரைக்கால், ஏப். 9: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்  என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி காரைக்காலில் கடந்த 2 தினங்களாக பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்கு இடையில் வேட்பாளர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டு காலமாக காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இது ஒரு  மக்கள் விரோத அரசு. மக்கள் நலனில் சிறிதுகூட அக்கறையில்லை. மின்சார  கட்டணம் உயர்வு, குடிநீர் வரி, சொத்து வரி, பாதாள சாக்கடை வரியை உயர்த்தியுள்ளது. குப்பைக்கு கூட வரியையும் கொண்டுவந்துள்ளனர். மக்கள் தலையில் வரிச்சுமையை  உயர்த்தியது காங்கிரஸ் அரசு. ஆனால் ரங்கசாமி தனது ஆட்சிக்காலத்தில் எந்தவித  வரியையும் உயர்த்தியது இல்லை.  

சட்டமன்ற  தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை மூன்று ஆண்டுகளாக நிறைவேற்றாத காங்கிரஸ்  அரசு நாடாளுமன்ற தேர்தலுக்காக கொடுக்கும் வாக்குறுதிகளை  மட்டும் எப்படி நிறைவேற்றும்? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி  கொடுக்கவில்லை. அரசுத்துறைகளில் 7500க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக  உள்ளது. ஆனால் அதை நிரப்பவில்லை.அதோடு அரசு சார்பு நிறுவனங்களில்  பணிபுரியும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கடந்த 22  மாதத்துக்கும் மேலாக சம்பளம் தரவில்லை.  சம்பளமின்றி ஊழியர்கள் எப்படி  குடும்பம் நடத்துவார்கள். எனவே இந்த மக்கள் விரோத காங்கிரஸ்  ஆட்சிக்கு தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஜக்கு சின்னத்துக்கு வாக்களித்து மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...