×

கவர்னருக்குதான் அதிகாரம் என கூறிவிட்டு கிரண்பேடியிடம் போட்டிபோடும் முதல்வர்

காரைக்கால், ஏப். 9:  புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமிக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி புதுச்சேரி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த 2 தினங்களாக, காரைக்காலில் திறந்த வேனில் ரங்கசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி திறந்தும் வைத்துள்ளேன். அடிக்கல் நாட்டியவரே திறந்து வைப்பது என்பது கடவுள் கொடுத்த பாக்கியம். அனைத்து பிராந்தியங்களிலும் திட்டங்கள் தொடங்கி வைத்ததில் எனது பெயர் கல்வெட்டில் இருக்கும். ஆனால் என்னை மூடுவிழா நாயகன் என்று காங்கிரஸ் வேட்பாளர் கூறுகிறார்.

மாறாக தினந்தோறும் எதிர்க்கட்சிகள் மீது குற்றங்கள் சொல்வதே  புதுச்சேரி அரசின் போக்காக உள்ளது. எதிர்க்கட்சிகள் மீது குற்றங்களை கூறிக் கொண்டு இருந்தால் எப்படி மக்களைப் பற்றி சிந்திக்க முடியும்? எப்படி திட்டங்களை நிறைவேற்ற முடியும்? புதுச்சேரியில் மத்திய அரசின் உதவியின்றி எந்த திட்டங்களையும் செய்ய முடியாது. அனைத்திற்கும் கவர்னரின் ஒப்புதல் தேவை. புதுச்சேரி முதல்வருக்கு இது தெரியும். ஆனாலும் ஒன்றும் தெரியாததுபோல் யாருக்கு அதிகாரம் என்பதில் கவர்னருடன் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் தேவை என்று நாடாளுமன்றத்திலேயே ஜெயலலிதா குரல் எழுப்பினார்.

புதுச்சேரி ஆட்சியாளர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை. ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு அனுப்பினால் கோப்புகளை திருப்பி அனுப்புவதும், மறுப்பதுமாக உள்ளனர். இது எப்போதும் இருப்பதுதான். இது முதல்வருக்கும் தெரியும். நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்தபோது கவர்னருக்குத்தான் அதிக அதிகாரம் என்று கூறினார். ஆனாலும் தற்போது அதிகாரத்திற்காக கவர்னருடன் போட்டி போட்டுக் கொண்டு உள்ளார். உச்சநீதிமன்றமும் கவர்னருக்குதான் அதிகாரம் என்று கூறிவிட்டது. ஆனாலும் முதல்வர், கவர்னருடன் போட்டி போட்டுக் கொண்டு புதுச்சேரி மக்களை வாட செய்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. எனவே  நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றால் மத்தியில் வரும் ஆட்சியுடன் இணக்கமான சூழலை வைத்துக் கொண்டு நல்ல திட்டங்களை நிறைவேற்றும். புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி வரும்போது மத்திய அரசிடம் எளிதாக நிதி பெற்று திட்டங்களை நிறைவேற்றும். அதன் மூலம் புதுச்சேரியை மீண்டும் சிறந்த மாநிலமாக கொண்டுவர முடியும். எனவே ஜக்கு சின்னத்தில் வாக்களித்து எங்கள் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் என்ஆர் காங்., எம்எல்ஏக்கள் திருமுருகன், சந்திர பிரியங்கா, அதிமுக எம்எல்ஏ அசனா, வேட்பாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : governor ,sculptor ,
× RELATED ஆந்திராவில் ஆட்சியமைக்க தெலுங்கு...