×

பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தாத ஆட்சியாளர்கள் மீது மக்கள் சந்தேகம்

புதுச்சேரி, ஏப். 9:  புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் எம்ஏஎஸ் சுப்ரமணியன் நேற்று தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திராநகர் தொகுதிகளில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு என்பது மக்களை சுகாதார சீரழிவுக்கு கொண்டு செல்வதாக உள்ளது.  தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் 14 வகையிலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதை புதுச்சேரியிலும் பின்பற்றி கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தடை செய்வதாக ஆட்சியாளர்கள் அறிவித்தனர். ஆனால் அதை நடைமுறைப்படுத்தவில்லை.

மேலும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆட்சியாளர்களை சந்தித்தும் பேசியுள்ளனர். இதனால் கையூட்டு பெற்றுக்கொண்டு இருப்பார்களோ? என்ற சந்தேகம் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோல் சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் மக்கள் நீதி மய்ய வேட்பாளராகிய நான் உங்களுக்கு சேவை செய்வேன்.  இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் பொதுச்செயலாளர் எ.மு.ராஜன், இணைபொதுச்செயலாளர் முருகேசன், பொருளாளர் தாமோ.தமிழரசன், செயலாளர்கள் அரிகிருஷ்ணன், நிர்மலா சுந்தரமூர்த்தி, ராம.ஐயப்பன், பிராங்கிளின் பிரான்சுவா, கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : rulers ,
× RELATED ஒகேனக்கல் அருகே காட்டுயானைகள்...