×

பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

பெரம்பலூர், ஏப். 9: பெரம்பலூர் மாவட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளை மக்களவை தேர்தல் பொது பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தனர். மக்களவை தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் நடைமுறை குறித்த பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வளாகத்திலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது. பயிற்சி வகுப்புகளை பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளரான மஞ்சுநாத் பஜன்ட்ரி, பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சாந்தா ஆய்வு செய்தனர். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடி மையங்கள், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 652 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடி மையங்களை பெரம்பலூர் சட்டமன்ற  தொகுதிக்கு 33 மண்டலமாகவும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு 30 மண்டலமாகவும் பிரிக்கப்பட்டு மண்டல அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவது குறித்த பயிற்சிகள், மண்டல அலுவலர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த மண்டல அலுவலர்கள் மூலமாக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் பணியாற்ற நியமிக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் நாளில் வாக்குச்சாவடி நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, பின்பற்ற வேண்டிய விதிமுறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பயிற்சி வகுப்பின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவது, தேர்தல் நாளன்று மாதிரி வாக்குப்பதிவு நடத்துவது, விவிபேட் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் நடைமுறை குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி  அளிக்கப்பட்டது.  மேலும் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் தபால் வாக்குச்சீட்டு அளிக்கப்பட்டது.

டிஆர்ஓ அழகிரிசாமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்டிஓ விஸ்வநாதன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மஞ்சுளா, தாசில்தார்கள் பெரம்பலூர் சித்ரா, குன்னம் செல்வராஜ், தேர்தல் தாசில்தார் பாலசுப்ரமணியன் மற்றும் பயிற்சியாளர்கள் அருளானந்தம், சின்னதுரை, துரைராஜ், தமிழரசன் உடனிருந்தனர்.

Tags : Pongalur ,Kunnam ,Assembly Constituency Officers ,
× RELATED முதியவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு