×

பாரதிய ஜனதா ஆட்சியில் உயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஜி.எஸ்.டியால் சிறு தொழில்கள் அழிந்தன காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு ஜமாஅத்துல் உலமா சபை ஆதரவு

மதுரை, ஏப். 8: உயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி அமலால் சிறு தொழில்கள் தடம் தெரியாமல் அழிந்து போயின. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் பங்கேற்றுள்ள கூட்டணிக்கு வாக்களிப்பது என தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது குறித்து ஜமாஅத்துல் உலமா சபையின் அன்வர் பாதுஷாஹ் உலவி, தலைவர் காஜா முயினுத்தீன் பாகவி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: 2019 நாடாளுமன்றத் தேர்தல், இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு மக்களுக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாகும். கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற பா.ஜ. அரசு, முழுக்க, முழுக்க மக்கள் விரோத அரசாகவே செயல்பட்டது. உயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி அமலாக்கமும் மிகப்பெரிய அளவில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை பாதித்தது. நாடு முழுவதும் ஏராளமான சிறு தொழில்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயின.

‘நீட்’ தேர்வை கட்டாயமக்கியதால் ஏழை, எளிய மக்களின் மருத்துவ கனவை சிதைத்தது. பெட்ரோல், கேஸ் விலை வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்ததால், நாட்டில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இது இந்திய மக்களின் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கிறது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்ட போதும், கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் தமிழகத்தின் டெல்டா மாவட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்த வரலாற்று சோகத்திற்கு ஆளான போதும், இவற்றை பார்வையிடக்கூட பிரதமர் மோடி வரவில்லை. இவற்றில் பாதிக்கப்பட்டோருக்கு இதுவரை எவ்வித உதவியும் செய்யவில்லை. இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணான தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை துறைகளை பகிரங்கமாக மத்திய அரசு மிரட்டியது.
ஒட்டு மொத்தத்தில் இந்திய நாடும், அரசியல் அமைப்புச்சட்டமும் பாசிச பாஜ அரசின் பிடியில் சிக்கி மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது. இந்த மக்கள் விரோத மோடி அரசை அகற்றியே தீர வேண்டும். எனவே தேசிய அளவில் பாஜ.வுக்கு மாற்றாக அமையும் வாய்ப்பும், வலிமையும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளதால், அக்கட்சி பங்கேற்றுள்ள கூட்டணியை ஆதரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Govt ,Bharatiya Janata ,coalition parties ,Congress ,Jamaatul Ulama Sabha ,
× RELATED வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின்...