×

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடரும்

குமாரபாளையம்,ஏப்.5: கூலி உயர்வு வழங்கும் வரை, விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என ஏஐசிசிடியூ தொழிற்சங்க கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையம் பகுதியில் உள்ள கொளத்துக்காடு, சின்னப்பநாயக்கன்பாளையம், ஐயங்காடு, சுந்தரம்காலனி, கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி கூடங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், கூலி உயர்வு கேட்டு, வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று குமாரபாளையம் சந்தைபேட்டை பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் கோவிந்தராஜ் பங்கேற்று பேசினார். மாவட்ட செயலாளர்கள் தண்டபாணி, மாரியப்பன் உள்ளிட்டோர் தொழிலாளர்கள் பிரச்னை கூறித்து விவாதித்தனர். ஆலோசனை கூட்டத்துக்கு பின் கோவிந்தராஜ் கூறியதாவது: குமாரபாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கையை தறி உரிமையாளர்கள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். சேலம் தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் கூலி உயர்வு கொடுக்காத 30 ஜவுளி உற்பத்தியாளர்கள், 24 அடப்புதறி உரிமையாளர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளோம்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் 3ம்தேதி சேலம் தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை அறிவிக்கப்பட்டது.  இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் தரப்பினர் மட்டுமே பங்கேற்றனர். ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்புதறி உரிமையாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதையடுத்து வரும் 10ம்தேதி பேச்சுவார்த்தைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி தொழிலாளர்களிடம் 8 மணிநேரம் மட்டுமே வேலை வாங்கப்பட வேண்டும். உற்பத்தி அடிப்படையில் சம்பளம் வழங்கும் முறையை மாற்றி, எட்டு மணி நேர வேலைக்கு, தறி ஒன்றுக்கு ரூ.150 வீதம் தினக்கூலி வழங்க வேண்டும். இதன்படி பத்து தறிகளை கொண்ட ஒரு பட்டறையில் தினம் ரூ. 1500 வீதம் ஆறு நாட்களுக்கு ரூ. 9ஆயிரம் கூலி வழங்க வேண்டும்.

மேலும், தார் போடும் தொழிலாளர்களிடம் ஒரே ஷிப்டில், இரண்டு ஷிப்டுக்கும் தேவையான தார் சுற்றி வைக்க கட்டாயப் படுத்தக்கூடாது.  தற்போது தறிக்கு ரூ. 15 வீதம் வழங்கப்படும் கூலியை உயர்த்தி தறிக்கு  ரூ.115 வழங்கப்பட வேண்டும். இதன்படி பத்து தறிகளை கொண்ட ஒரு பட்டறையில் தினம் ரூ.1150 வீதம், வாரத்துக்கு ரூ.6,900 கூலி வழங்க வேண்டும். மேலும்,ஞாயிற்றுகிழமை கட்டாய விடுமுறை அறிவிக்க வேண்டும். இதை நடைமுறை படுத்தினால் தான், இளைஞர்கள் விசைத்தறி தொழிலில் ஈடுபடுவார்கள். இல்லாவிடில் விசைத்தறி தொழிலை செய்ய தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்கள். விசைத்தறி தொழில் அழிந்து போகும். தற்போதுள்ள நிலையில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர வேண்டும் என கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தல் விதி மீறியதாக வழக்கு பதிவு:

தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டம் குறித்து, ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தினர், சேலம் சாலையில் ராஜம் தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் மின் கம்பத்தில் தட்டி வைத்திருந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ள நிலையில், தொழிற்சங்கத்தினர் தட்டி வைத்தது விதிமுறை மீறிய செயல் என தெரிவித்த குமாரபாளையம் காவல் துறையினர், தொழிற்சங்கத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தலில் போட்டியே போடாத தொழிற்சங்கத்தினர் மீது, தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொழிற்சங்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Loom ,
× RELATED ஊதிய உயர்வு வழங்கவில்லை!:...