×

பிரம்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக புனரமைப்பு பணிக்காக தொல்லியல் துறை வல்லுனர் ஆய்வு

பெரம்பலூர், ஏப். 3: பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான புரனமைப்பு பணிகளுக்காக இந்திய தொல்லியல் துறை வல்லுநர் ஆய்வு செய்தார். பெரம்பலூர்- துறையூர் மெயின்ரோட்டில் நகரின் மையத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது. பலநூறு ஆண்டு பழமையான இந்த கோயிலில் உள்ள லிங்கம், மகாபாரத காலத்தில் அர்ச்சுனனால் வழிபட்ட லிங்கம் என செவிவழி செய்தியாக கூறப்பட்டு வருகிறது. இந்த கோயில் கும்பாபிஷேகம் 2006ம் ஆண்டு நடத்தப்பட்டு தற்போது 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையொட்டி கோயில் புரனமைப்பு பணிகளை மேற்கொண்டு மறுகும்பாபிஷேகம் நடத்த வேண்டியுள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையொட்டி தமிழக அரசு உத்தரவின்படி ஓய்வுபெற்ற தொல்லியல்துறை வல்லுநரான கவுதமபுத்திரன் என்பவர் நேற்று பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு வந்து கோயில் கட்டுமானங்கள், கட்டப்பட்ட காலம், நுட்ப வேலைப்பாடு குறித்து ஆய்வு செய்தார். அப்போது பெரும்பாலான சிவாலயங்களை போல் பிரம்மபுரீஸ்வரர் கோயிலும் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கும். நாயக்கர்கள் காலத்தில் சீரமைக்கப்பட்டிருக்கும் என தொல்லியல்துறை வல்லுநரால் யூகிக்க முடிந்தது.

இந்த ஆய்வின்போது கோயில் செயல் அலுவலர் மணி, கோயில் குருக்கள் சுவாமிநாத சிவாச்சாரியார், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், தொழிலதிபர்கள் மகேஸ்வரன், பாபு, கீத்துக்கடை குமார் உடனிருந்தனர்.
இதில் கவுதமபுத்திரன் ஆய்வு செய்து அனுப்பும் அறிக்கைக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறை மூலம் அதன் திருச்சி மண்டல அளவிலான புராதன கமிட்டி, மாநில அளவிலான புராதன கமிட்டி ஆகியவற்றின் அனுமதியோடு கோயில் புனரமைப்பு பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தமிழக அரசின் ஒப்புதலுக்காக இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுப்பப்படும். அதன்பிறகு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசின் அனுமதியோடு கோயில் புனரமைப்பு பணிகள் நடத்தி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் செயல் அலுவலர் மணி தெரிவித்துள்ளார்.

Tags : Brahmapureeswarar Temple Kumbabishek ,
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...