×

தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி போராட்டம் எதிரொலி வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி

கூடுவாஞ்சேரி, ஏப்.3: அடிப்படை வசதிகள் செய்யாத அதிகாரிகளை கண்டித்து, வரும் மக்களவை தேர்தலை புறக்கணித்து கடந்த வாரம் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதன் எதிரொலியாக நல்லம்பாக்கம் மற்றும் கீரப்பாக்கம் ஊராட்சிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், குமிழி ஆகிய ஊராட்சிகளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிகளில் கடந்த 19 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. இதனை கண்டித்து, 3 ஊராட்சி பொதுமக்கள் வரும் மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்தனர்.
இதைதொடர்ந்து, மக்களவை தேர்தலை புறக்கணித்து, கடந்த வாரம் விநாயகபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக, வண்டலூர் வருவாய் ஆய்வாளர் அமுதா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கீதா, சரவணன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் நல்லம்பாக்கம் மற்றும் கீரப்பாக்கம் ஊராட்சி பொதுமக்களிடம் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பொதுமக்கள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம், வனத்துறையால் கிடப்பில் போடப்பட்ட அருங்கால் -  காட்டூர் சாலையை சீரமைத்து தர வேண்டும். கீரப்பாக்கம் ஊராட்சியில் இலவச  வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை  உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும்  இயக்க வேண்டும்.  துணை சுகாதரா நிலையம் அமைத்து தரவேண்டும் என்பது உள்பட  பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாததால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்தனர்.

இதுகுறித்து, பொதுமக்கள்  கூறியதாவது, தேர்தல் நேரங்களில் ஓட்டு கேட்டு வருபவர்கள், அடிப்படை வசதிகளை செய்வதாக வாக்குறுதி தருகிறார்கள். ஆனால், வெற்றி பெற்ற பிறகு செவி சாய்ப்பதே கிடையாது. எனவே, வரும் மக்களவை தேர்தலுக்குள் தேவையான அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால், தேர்தலை புறக்கணிப்போம். இதையும் மீறி எங்கள் ஊர் பக்கம் ஓட்டு கேட்டு வருபவர்களை ஓட ஓட விரட்டுவோம்.வருவாய் அதிகாரிகள் கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் கூறி பிரச்னையை கூறி சரி செய்கிறோம். இந்த முறை தேர்தலில் வாக்களியுங்கள் என கூறினர். ஆனால், நாங்கள் முடியாது என கூறிவிட்டோம். மீண்டும், செங்கல்பட்டு தாசில்தாரிடம் பேச்சு வார்த்தைக்கு எங்களை அழைத்தானர். அதற்கு மறுப்பு தெரிவித்தோம். கலெக்டர், தாசில்தார் எங்களை தேடி வர வேண்டும். நாங்கள், தேர்தல் புறக்கணிப்பு செய்வது உறுதி என்றனர்.


Tags : Negotiations ,revenue department officials ,election ,
× RELATED கண்ணியமான பிரசாரத்திற்கு கட்சி...