×

பவானி ஆற்றில் தொடரும் தண்ணீர் திருட்டு அறுவடை பணி பாதிக்கும் அபாயம்

ஈரோடு, மார்ச் 28:  பவானி ஆறு மற்றும் வாய்க்காலில் தொடரும் தண்ணீர் திருட்டால் 2ம் போக அறுவடை பணிகள் முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் பாசன வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீரை சிலர் முறைகேடாக மின்மோட்டார் வைத்து திருடுவதால் முறையாக பாசனம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக பல ஆண்டுகளாக புகார் இருந்து வருகிறது. இதைத்தடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் பல முறை வலியுறுத்தியும் பொதுப்பணித்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை.கோடை காலத்தில் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரை கூட குழாய் மூலம் உறிஞ்சி எடுத்து விடுவதால் பவானி ஆற்றை நம்பி உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தாண்டு பவானிசாகர் அணையின் நீர் இருப்பு ஓரளவு திருப்திகரமாக இருந்ததையடுத்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காலிங்கராயன், கீழ்பவானி ஆகிய பாசனங்களுக்கு இரண்டாம் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீரை மின்மோட்டார், ஆயில் என்ஜின் வைத்து சிலர் திருடுவதால்  பாசன விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களை அறுவடை செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 பொதுப்பணித்துறையும், மாவட்ட நிர்வாகமும் தண்ணீர் திருட்டை தடுத்தால் மட்டுமே நடப்பு பயிர்களை அறுவடை செய்ய முடியும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி, செயலாளர் ராஜா ஆகியோர் கூறியதாவது: தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் நஞ்சை பாசனத்திற்கு கடந்த டிசம்பர் 25ம் தேதியும், கீழ்பவானி புஞ்சை பாசனத்திற்கு கடந்த ஜனவரி 7ம் தேதியும் இரண்டாம் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போதைய நிலையில் பவானிசாகர் அணையில் 10 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

இதில், அணையின் நிலை இருப்பு 3.5 டிஎம்சி போக மீதமுள்ள 7.5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பயன்படுத்த முடியும். இவற்றில், தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 4 டிஎம்சி, காலிங்கராயனுக்கு 2.5 டிஎம்சி, கீழ்பவானிக்கு 2.75 டிஎம்சி கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அணையின் தண்ணீர் இருப்பு குறைவாகவும், தேவை அதிகமாகவும் உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பவானி ஆறு மற்றும் வாய்க்கால்களில் நடைபெற்று வரும் தண்ணீர் திருட்டு காரணமாக ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் முழுமையாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் திருட்டை தடுத்தால் மட்டுமே இரண்டாம் போக அறுவடை நடைபெற வாய்ப்பு உள்ளது. இல்லையெனில், அறுவடை முற்றிலும் அழிந்து விடும். எனவே, பொதுப்பணித்துறையினர் சரியான நீர் மேலாண்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Bhavani river ,
× RELATED காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை