×

சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம் வண்ண மயமாகிறது ஓவியர்கள் வாழ்க்கை

பழநி, மார்ச் 28: சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரத்தால் ஓவியர்களின் வாழ்க்கை வண்ணமயமாக மாறி வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 20 நாட்களே உள்ள நிலையில் தேர்தலுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையே பெரும்பாலும் காணப்படுகிறது. காரணம் எந்த முறையும் இல்லாத அளவிற்கு இம்முறை தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுதான். இதனால் அரசியல்வாதிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் அவஸ்தைக்கு உள்ளாகி உள்ளனர். தேர்தலுக்காக செய்யப்படும் விளம்பரங்களில் தேர்தல் ஆணையம் விதித்த கெடுபிடிகளால் பல்வேறு தரப்பு தொழிலாளர்கள் கையை பிசையும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பிளக்ஸ் போர்டுகளோ, கொடிகளோ தனியார் இடங்களில்கூட கட்டக்கூடாது என்ற விதிமுறையால் நகர்ப்பகுதிகளில் தேர்தலுக்கான அறிகுறியே இல்லாமல் உள்ளது. இந்நிலையில் ஊராட்சிகளில் மட்டும் தனியார் சுவர்களில் அனுமதி பெற்று விளம்பரம் வரைந்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் விதிமுறையை தளர்த்தியது. இதன்படி பிளக்ஸ் போர்டு வருகையால் வாழ்க்கையை தொலைத்து அவதிப்பட்டு வந்த ஓவியக்கலைஞர்களின் வாழ்க்கையில் தற்போது மீண்டும் ஒளி ஏற்றப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக மக்கள் மனதில் தங்களது வேட்பாளரையும், சின்னத்தையும் நிலைநிறுத்த சுவரில் சின்னங்கள் வரையும் பணியில் அரசியல் கட்சிகள் தங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனடிப்படையில் ஓவியம் வரையும் ஆட்கள் பற்றாக்குறையின் காரணமாக தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு சென்ற ஓவியக்கலைஞர்களை தேடிப்பிடித்து கூடுதல் கூலி கொடுத்து அழைத்து வந்து ஓவியம் வரைய வைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பழநியை சேர்ந்த ஓவியர் சின்னப்பா கூறியதாவது, ‘பிளக்ஸ் போர்டுகளின் வருகையால் எங்கள் தொழில் கடும் பாதிப்பிற்கு உள்ளானது. தற்போது தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைகளால் மீண்டும் எங்களுக்கு தற்காலிகமாக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. ஒரு சின்னம் வரைவதற்கு ரூ.50 வரை கொடுக்கின்றனர். இரவு பகல் பாராது தற்போது வேலை உள்ளது’ என்றார்.

Tags : election campaign ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரியங்கா...