×

கார்ப்பரேட்களுக்காக ஆட்சி நடத்துபவர் மோடி

புதுச்சேரி, மார்ச் 28:   புதுவை மக்களவை தொகுதி காங்கிரஸ்- திமுக கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நேற்று பல்வேறு இடங்களில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார். முதலியார்பேட்டை வந்த அவரை, வட்டார காங்கிரஸ் தலைவர் குமார், திமுக லயன் சுரேஷ், திராவிடமணி, விசிக வீரசெல்வன், மதிமுக கபிரியேல், இந்திய கம்யூ., ஏகாம்பரம் மற்றும் காங்கிரசார், திமுகவினர், கூட்டணி கட்சியினர் வரவேற்றனர். தொடர்ந்து நாஞ்சில் சம்பத் பேசும்போது, வருகிற நாடாளுமன்ற தேர்தல் வாழ்வா, சாவா போராட்டத்தைப் போன்றது. இது இந்தியாவுக்கு 2வது சுதந்திரப்போர். முதல் சுதந்திரத்தை பெற்று தந்தவர் காந்தி. இப்போது 2வது சுதந்திர போராட்டத்துக்கு தலைவராக ராகுல் இருக்கிறார். மோடி பிரதமர் ஆனது முதல்
இந்தியாவின் கோபுர பெருமை குட்டிச்சுவராக்கப்பட்டு இருக்கிறது. 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 92 நாடுகளுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஆனால் வெறும் 19 நாட்கள் தான் அவர், பிரதமர் இருக்கையில் அமர்த்திருக்கிறார். பாராளுமன்றத்தில் எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை, கேள்விகளுக்கு பதிலும் அளிக்கவில்லை, எந்த பத்திரிகையாளரையும் சந்திக்கவில்லை. ரூ.3200 கோடியில் படேல் சிலை அமைத்துள்ளார். இது தேவையா? இந்த சிலை தயாரிக்கப்பட்டது சீனாவில்.

இதுதான் மேக் இன் இந்தியாவா? வெறும் கார்ப்பரேட்களுக்காக ஆட்சி நடத்துபவர் மோடி. பயங்கரவாதத்தை ஒழிக்க 500, ஆயிரம் ருபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்தார். ஆனால் அது உன்னால் முடிந்ததா? இப்போது காவலாளி என்று கூறுகிறாய், யாருக்கு காவலாளி, கார்ப்பரேட்களுக்குத்தான் காவலாளி. ராகுல் இந்தியாவை ஆள்வார், ஸ்டாலின் தமிழகத்தை ஆள்வார். இது நிச்சயம். புதுச்சேரியில் முதல்வருக்கு நடுக்கத்தை தர முயற்சிக்கிறார் கிரண்பேடி. என்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் பாரதி, சுதேசி, ரோடியர் மில் மூடப்பட்டு 13 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து, அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. முதல்வர், சபாநாயகர், அமைச்சர், எம்எல்ஏ என பல பதவிகளை வகித்த வைத்திலிங்கம் இப்போது களத்தில் நிற்கிறார். அவரை காயப்படுத்தி விடாதீர்கள். அவருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. அவரது உற்சாகத்துக்கு ஒரு ஊனம் வந்திருக்கிறது. இதனால் அவர் களைத்துப்போய் விடுவார் என கருதுகிறேன். அவர் தமிழ்நாட்டில் 2ம் இடம் பிடிப்பார். மூன்றாம் இடம் எடப்பாடி தள்ளப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றார்.

Tags : Modi ,corporates ,
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...