×

கோடை வெயில் தாக்கம் எதிரொலி வாக்குச்சாவடிகளில் உப்பு சர்க்கரை கரைசல்

திருவள்ளூர், மார்ச் 27: வரும் ஏப்ரல் 18ம் தேதி வெயில் பாதிப்பில் இருந்து வாக்காளர்களை காப்பாற்ற, வாக்குச் சாவடிகளில் உப்பு, சர்க்கரை கரைசலை வைக்க சுகாதாரத்துறையினருக்கு, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. பல மாவட்டங்களில், 107 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் கொளுத்தி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம், வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால், வாக்குச் சாவடிகளுக்கு வரும் வாக்காளர்கள், அலுவலர்கள் ஆகியோரை வெயிலின் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு, சர்க்கரை கலந்த கரைசல் வைக்க சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும், உப்பு, சர்க்கரை கரைசலை வைக்க சுகாதாரத் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’வெயிலில் வரும் வாக்காளர்கள், உடலில் தண்ணீர் வறண்டு மயக்க நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது. அதனால், வாக்குப்பதிவு குறைய வாய்ப்புள்ளது.  எனவே, அவர்களுக்கு உடனடியாக உப்பு, சர்க்கரை கலந்த கரைசலை வழங்கினால், இயல்பு நிலைக்கு வந்துவிடுவர்.அதனால், தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் அனைத்திலும், இந்த கரைசலை வைக்க, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கூடுதலாக இந்த கரைசல் வழங்கப்படும்’’என்றார்.

Tags : Echo ,
× RELATED கொள்ளிடம் அக்ரஹார தெருவில் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றம்