×

புழல் அருகே ரூ.43.19 கோடியில் ரெட்டேரி சீரமைப்பு பணிகள் தீவிரம்

 

புழல், மே 31: புழல் அருகே ரூ.43.19 கோடி மதிப்பில் ரெட்டேரி சீரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புழல் அருகே உள்ள ரெட்டேரி நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த ஏரியின் நீர் பிடிப்பு 350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. முழு கொள்ளளவு 32 மில்லியன் கன அடி ஆகும். ஏரியின் அருகில் சுமார் 480 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் இருந்தது. இந்நிலையில் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்தி வந்தனர்.

நாளடைவில் அனைத்து விவசாய நிலங்களும், வீட்டு மனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றம் கண்டதால் தற்போது ஏரி நீர் சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் தண்ணீர் மாசுபடாமல் பாதுகாக்க கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரெட்டேரியை மேம்படுத்த தமிழக நீர்வளத்துறை சார்பில் ரூ.43 கோடியே 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஏரியை தூர்வாரி மண் திட்டுக்கள் அமைத்து கொள்ளளவை அதிகப்படுத்தவும் மழைக்காலங்களில் உபரி நீரை வெளியேற்ற கூடுதலாக மதகுகளை அமைத்திடவும், ரெட்டேரியின் இடையில் அமைந்துள்ள சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் பாதுகாப்பு தடுப்புச் சுவர்கள் அமைத்து தண்ணீர் மாசுபடாமல் பாதுகாக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post புழல் அருகே ரூ.43.19 கோடியில் ரெட்டேரி சீரமைப்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Retteri ,Water Resources Department ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம்...