×

கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்பசுமை சாம்பியன் விருதாளர் தேர்வு

திருவள்ளூர், மே 30: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் கடந்த 3.9.2021 அன்று, 2021-2022 நிதி ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு முன்மாதிரியான பங்களிப்பு அளித்து தங்களை முழுமையாக அர்ப்பணித்த 100 தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருதும், தலா ₹1 லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுரிகள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள், அரசு சாரா அமைப்புகளுக்கு 2023 – 2024 ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில் நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, கால நிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச் சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, இதர சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்கள் ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நடு மாசு கட்டுப்பாடு வாரியம், கலெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்திலிருந்து (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் திருவள்ளூரில் உள்ள தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலத்திலும், கும்மிடிப்பூண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலத்திலும் அணுகலாம் என கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்திருந்தார்.அதன்படி திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் சுப்பையா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ரவிசந்திரன், லிவிங்ஸ்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது கலெக்டர் பேசுகையில், இந்த வருட பசுமை சாம்பியன் விருதுக்காக 7 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பித்தவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் பேருராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெயக்குமார், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுபாஷினி, நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் லேகா, சபரிநாதன், ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ஸ்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்பசுமை சாம்பியன் விருதாளர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Minister ,Environment and Climate Change ,
× RELATED உங்களைத் தேடி உங்கள் ஊரில்...