×

சேடபட்டி அருகே சாலை அமைக்க ஜல்லி கொட்டி ஆறு மாசமாச்சு தார் ஊற்ற எவ்வளவு நாளாகும் கிராம மக்கள் கேள்வி

பேரையூர், மார்ச் 26: சேடபட்டி அருகே சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டி 6 மாதமாகியும் சாலை அமைக்காததால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஜம்பலப்புரம்-அத்திபட்டி சாலை. இந்த சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலை போடுவதாககூறி ஜல்லிகள் கொட்டப்பட்ட நிலையில் எந்த வேலையில் நடக்காமல் கிடக்கிறது.
இதனால் இந்த வழியாக சேடபட்டி மற்றும் சேடபட்டி அரசு மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் அத்திபட்டி, ஜம்பலப்புரம் வழியாக செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இங்கு பிரசித்திபெற்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கும் அத்திபட்டி புதுமரியம்மன்கோவில் திருவிழா வருகின்ற ஏப்ரல் 21ந் தேதி தொடங்கி ஏப்ரல் 30ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

இத்திருவிழாவிற்கு இந்த சாலை வழியாக 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், பாதையாத்திரையாக பெண்கள், குழந்தைகள் என அதிகமான பக்தர்கள் இந்த சாலை வழியாக நடந்து செல்வார்கள். இந்த சாலை இப்பகுதி பொதுமக்களுக்கு விரைந்து செல்லும் குறுக்குச்சாலையாகவும் உள்ளது. இந்த சாலையை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம், மற்றும் யூனியன் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜல்லி கற்கள் கொட்டி 6 மாதமான பின்னரும் பணிகள் தொடங்காமல் உள்ளது. இனி தார் ஊற்றி சாலை அமைக்க எவ்வளவு நாளாகுமோ என கிராம மக்கள் தெரிவித்தனர். எனவே திருவிழா தொடங்கும் முன்பு சரிசெய்யவேண்டும் என ஜம்பலப்புரம், சேடபட்டி, கேத்துவார்பட்டி, கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Jali ,Chedapatti ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...