×

பட்டிவீரன்பட்டி பகுதியில் தென்னையில் மகசூல் அதிகரிக்க ஆட்டுக்கிடை

பட்டிவீரன்பட்டி, மார்ச் 26: பட்டிவீரன்பட்டி பகுதியில் தென்னை மரங்களில் மகசூல் அதிகரிப்பதற்காக விவசாயிகள், தோப்புகளில் ஆட்டுக்கிடை அமைத்து இயற்கை உரம் அளித்து வருகின்றனர். பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, சித்தையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. தற்போது போதிய மழையின்மையாலும், கடும் வெயிலாலும் தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் குறைந்தளவு நீரை கொண்டு தென்னை மரங்களை காப்பாற்றி வருகின்றனர். இதற்கிடையே தற்போது தோப்புகளில் ஆட்டுக்கிடை அமைத்து தென்னை மரங்களுக்கு இயற்கை உரம் அளிப்பதில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக தென்னந்தோப்புகளில் குறிப்பிட்ட இடத்தை அடைத்து சுற்றிலும் தற்காலிக வேலி அமைத்து அதில் ஆடுகளை அடைத்து விடுகின்றனர். குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு அந்த இடத்தில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டு தீவனம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஆடுகளில் கழிவுகள் முழுமையாக இயற்கை உரமாக மாறி தென்னை மரங்களுக்கு அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கின்றனர்.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், ‘ஆட்டின் எருது தென்னை மரங்களுக்கு நல்ல இயற்கை உரமாக விளங்குகிறது. இதன்மூலம் மகசூல் அதிகரித்து கூடுதல் வருமானம் கிடைக்கிறது. தோப்புகளில் ஆட்டுக்கிடை அமைப்பதற்கு ஆடுகள் எண்ணிக்கை மற்றும் ஆடுகள் அடைத்து வைக்கப்படும் காலஅளவை பொறுத்து அதற்கான கூலியை உரிமையாளருக்கு வழங்குகிறோம்’ என்றனர். ஆட்டுக்கிடை உரிமையாளர்கள் கூறுகையில், ‘போதிய மழையின்மை, கடும் வெயிலால் தற்போது மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. இதனால் தீவனம் கிடைப்பது பெருமளவு குறைந்து விட்டது. இந்த காலத்தில் ஆட்டுக்கிடை அமைப்பதன் மூலம் வருமானம் கிடைப்பதுடன் ஆடுகளை மேய்க்கும் வேலையும் குறைகிறது’ என்றனர்.

Tags : area ,Pattiviranppatti ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு