×

மீன்பிடி தடைகாலம் தொடங்கும் முன் கட்டுமாவடி மார்க்கெட்டிற்கு இறால் வரத்து அதிகரிப்பு மீனவர்கள் மகிழ்ச்சி

மணமேல்குடி, மார்ச் 26: மீன்பிடி தடைக்காலம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கட்டுமாவடி பகுதிகளில் இறால் வரத்து அதிகரித்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மட்டும் சுமார் 15க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் மற்றும் நண்டு கம்பெனிகள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி  சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமில்லாமல் ராமநாதபுரம், பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும்  மீன்கள் விற்பனைக்கு வருகிறது.

இந்த மீன்களை வாங்குவதற்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன் வரத்து அதிகமாக இருக்கும். மீன் இனப்பெருக்க உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும்   கடலில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் ஆரம்பிக்க சில தினங்களே உள்ள நிலையில் கட்டுமாவடி பகுதிகளில் மீன் வரத்து அதிகரித்துள்ளது. அனைத்து வகை இறால்களும் இங்கு விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக வெள்ளை இறால், தாழை இறால், கரும்புலி இறால், செலங்கை இறால், எஸ்ஸன் இறால், சென்னகூனி இறால், சிங்கி இறால் போன்ற வகைகளும் அதிக அளவு விற்பனைக்கு வருகின்றன. சிங்கி இறாலின் வகையான மொட்டை சிங்கி, வெட்டு சிங்கி போன்ற வகைகளும் அதிகளவு விற்பனைக்கு வருகின்றன.

Tags : fishermen ,
× RELATED படகு சேதம்: கடலில் 3 மீனவர்களை தேடும் பணி தீவிரம்