×

மத்திய அரசின் சூழ்ச்சிகளை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்

காரைக்கால், மார்ச் 26: நல்ல திட்டங்களால் புதுச்சேரி அரசு பெயர் வாங்கி விடக்கூடாதென செயல்படும் மத்திய அரசின் சூழ்ச்சிகளை மக்களுக்கு புரிய வைக்கவேண்டும் என அமைச்சர் கமலக்கண்ணன் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக, காரைக்கால் திருநள்ளாறு சேத்தூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு பேசியதாவது: புதுச்சேரி காங்கிரஸ் அரசு நல்ல திட்டங்களை செயல்படுத்தி, மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கிவிடக்கூடாது என மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது. அதற்கு ஏற்ப கவர்னர் கிரண்பேடியும் புதுச்சேரி அரசை செயல்பட விடாமல் பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டுவருகிறார்.

மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்குமிடையே  உள்ள வேறுபாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாநிலங்களில் அமைச்சரவை தீர்மானங்களை கவர்னர் ஏற்றுக்கொள்வார். ஆனால், யூனியன் பிரதேசங்களில் அதிகாரம் கவர்னர் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இதுவரை எத்தனையோ பேர் கவர்னர்களாக இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் அனுசரித்து, ஆலோசித்தே செயல்பட்டனர். கிரண்பேடி மட்டும் மத்திய அரசின் கைப்பாவையாக இயங்கிக் கொண்டிருக்கிறார். எனவே, புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களை மீண்டும் விரைவாக செயல்படுத்தவும், ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்படவும் காங்கிரஸ் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். கட்சி நிர்வாகிகள் இதனை மக்களுக்கு புரியவைத்து வாக்கு சேகரிக்கவேண்டும். இவ்வாறு பேசினார்.தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் சேத்தூர் கிராமத்தில் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார்.


Tags : government ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...