×

திமுக, என்ஆர் காங். வேட்புமனு தாக்கல்

புதுச்சேரி, மார்ச் 26:  தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வெங்கடேசன், என்ஆர் காங்கிரஸ் சார்பில் நெடுஞ்செழியன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏவாக இருந்த அசோக் ஆனந்த் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றார். இதையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுடன் இத்தொகுதிக்கும் ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 இத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக சார்பில் வெங்கடேசன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் அமமுக சார்பில் முருகசாமி போட்டியிடுவார் என்று நேற்று அறிவிப்பு வெளியானது. ஆனால், என்ஆர் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. மேலும், வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கிய நிலையில் 22ம் தேதி வரை இத்தொகுதிக்கு யாரும் மனு தாக்கல் செய்யாமல் இருந்தனர். இந்நிலையில் நேற்று தட்டாஞ்சாவடியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்மித்தாவிடம் திமுக, என்ஆர் காங்., உட்பட 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். முதல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் பாசறை மாநில செயலாளர் கவுரி மதியம் 12.30 மணிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக ரமேஷ் என்பவரும் மனு அளித்தார்.

 அவரை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தனது மூத்த சகோதரியின் மகனான நெடுஞ்செழியனை வேட்புமனு தாக்கல் செய்ய அழைத்து வந்தார். அப்போது என்ஆர் காங்., பொதுச்செயலாளர் பாலன், அன்பழகன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர். தட்டாஞ்சாவடி தொகுதியில் என்ஆர் காங்., சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நெடுஞ்செழியன் மதியம் 1.20 மணியளவில் தாக்கல் செய்தார். புதுவையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளரை அறிவித்த பிறகே மனுதாக்கல் செய்த நிலையில், என்ஆர் காங்கிரசில் மட்டும் மனுதாக்கலுக்கு பிறகே வேட்பாளர் யார் என்பது தெரியவந்தது. என்ஆர் காங்கிரசை தொடர்ந்து, திமுக வேட்பாளர் வெங்கடேசன் வேட்புமனு தாக்கல் செய்தார். அக்கட்சியின் மாநில அமைப்பாளர்களான எஸ்பி சிவக்குமார் (வடக்கு), சிவா எம்எல்ஏ (தெற்கு), மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மாநில குழு உறுப்பினர் சேதுசெல்வம், விசிக முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் பேரணியாக வந்து வெங்கேடசன் மனு தாக்கல் செய்தார். மேலும், மாற்று வேட்பாளராக வெங்கடேசனின் சகோதரர் குபேரன் மனு தாக்கல் செய்தார்.தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இந்நிலையில் அமமுக வேட்பாளரான முருகசாமி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களமும் விறுவிறுப்பை எட்டியுள்ளது.

Tags : DMK ,NRKong ,
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்