×

அதிமுக, பாஜவுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு குமரி மேற்கு மாவட்ட தமாகா தலைவர் காங்கிரசில் ஐக்கியம்

மார்த்தாண்டம், மார்ச் 26: அதிமுக, பாஜவுடன் மக்களவை தேர்தல் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மேற்கு மாவட்ட தமாகா தலைவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளராக எச்.வசந்தகுமார் களமிறக்கப்பட்டு உள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜ சார்பில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் களம் இறங்கி உள்ளார். இவர்கள் தவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் குதித்துள்ளன.

இதில் காங்கிரஸ், பா.ஜ இடையே இருமுனை போட்டியே நிலவும் என்றாலும், அமமுக வேட்பாளர் இன்ஜினியர் லெட்சுமணனும் நெருக்கடி கொடுக்கலாம் என கருதப்படுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜ, அதிமுகவுடன் தமாகா கூட்டணி வைத்துள்ளது கட்சியின் ஒரு சாரார் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக குமரி மேற்கு மாவட்ட தமாகா நிர்வாகிகள், தொண்டர்கள் சிலர் அதிமுக கூட்டணியில் விரும்பம் இல்லாமல், தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்தனர். இந்த நிலையில், மேற்கு மாவட்ட தமாகா தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த கூட்டத்தில், முக்கிய பல நிர்வாகிகள், அதிமுகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், காங்கிரசில் ஐக்கியமாகி விடலாம் எனவும் ஆலோசனை வழங்கினர். இதையடுத்து மேற்கு மாவட்ட தமாகா தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமையில் சுமார் 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி மார்த்தாண்டம் சாங்கையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் வந்து மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏவுக்கு சால்வை அணிவித்து அக்கட்சியில் இணைந்தனர்.

Tags : AIADMK ,Unity ,alliance ,Kumari West Dhamma ,Congress ,Bhajan ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...