×

நெய்வேலியில் காவடி, பால்குட ஊர்வலம்

நெய்வேலி, மார்ச் 22: நெய்வேலி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நெய்வேலி வேலுடையான் பட்டு பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்து வந்தது. நேற்றுமுன்தினம் திருக்கல்யாண உற்சவம், நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெய்வேலி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-27ல் பெருமாள் கோயிலில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம், அலகு குத்தி ஊர்வலமாக கோயிலுக்கு வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவிழாவை முன்னிட்டு நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் தலைமையில்  இன்ஸ்பெக்டர்கள் ரவீந்தர ராஜ், ஜெய்ஹிந்த் தேவி உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் என்எல்சி செக்யூரிட்டி ஊழியர்கள், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பண்ருட்டி: பண்ருட்டி அருகே புதுப்பேட்டை கரும்பூர் மெயின்ரோட்டில் உள்ள முருகர் கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் முருகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஏராளமான முருக பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் காவடி எடுத்துசென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் தொரப்பாடி குமரகோயில், புதுபபேட்டை சித்திவிநாயகர் ஆலயம் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் காவடி எடுத்து வீதி உலா வந்தனர்.

Tags : Balguda ,Neyveli ,
× RELATED நெய்வேலி அருகே ஏரியில் மூழ்கி மாயமான மாணவர் சடலமாக மீட்பு