×

50 பேர் மீது போலியாக கடன் பெற்று ₹35 லட்சம் மோசடி

திருபுவனை, மே 11: திருபுவனை கூட்டுறவு சங்கத்தில் 50 பேர் மீது போலியாக கடன் பெற்று ரூ.35 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக மேலாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி திருபுவனையில் விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் திருபுவனை, மதகடிப்பட்டுபாளையம், திருபுவனைபாளையம், மதகடிப்பட்டு, நல்லூர், நல்லூர் குச்சிபாளையம், கலிதீர்த்தாள்குப்பம், ஆண்டியார்பாளையம், குச்சிப்பாளையம், சிலுக்காரிபாளையம், மயிலம் பாதை ஆகிய 11 கிராம விவசாயிகள், பொதுமக்கள் சுமார் 6,500 பேர் உறுப்பினராக உள்ளனர். இச்சங்கத்தின் மூலம் மகளிர் சுயஉதவி குழு கடன்கள், விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள கலிதீர்த்தாள்குப்பம் முத்தையா கவுண்டர் தெருவை சேர்ந்த முருகன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கூட்டுறவு சங்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ள கடன்கள் குறித்து தகவல் பெற்றுள்ளார். அதில், பெரும்பாலான நபர்கள், விவசாயிகளே இல்லாமல் கடன் பெற்றதும், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வருவாய்த்துறை அதிகாரிகள் கையெழுத்து மற்றும் அரசு முத்திரைகள் இட்டு போலியாக சான்றிதழ்கள் பெறப்பட்டு, அதன் மூலம் கடன் பெற்றதும் தெரியவந்தது.

அதன்படி, கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரும், அந்த வங்கியில் மேலாளராக பணியாற்றும் ஜெயக்குமார் என்பவரும், 50 நபர்கள் மீது போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்து சுமார் ரூ.35 லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து முருகன், திருபுவனை காவல் நிலையத்தில் மேற்கண்ட 2 பேர் மீதும் மோசடி வழக்கு பதிய வேண்டும் என்று புகார் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில், திருபுவனை எஸ்ஐ இளங்கோ மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போலியாக சான்றிதழ் வைக்கப்பட்டு கடன் பெற்றது தெரிய வந்ததையடுத்து ரமேஷ், ஜெயக்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 50 பேர் மீது போலியாக கடன் பெற்று ₹35 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Tiruphuvanai ,Thirupuvanai ,Puducherry Tirubhuvana ,Dinakaran ,
× RELATED மடுகரை அருகே தமிழக பகுதிக்கு சாராயம் கடத்தியவர் கைது