×

பேரையூரில் துணை வட்டாட்சியர் இல்லாததால் சான்றிதழ்களும் வழங்கவில்லை

பேரையூர், மார்ச் 21: துணை வட்டாட்சியர் தேர்தல் பணிக்கு சென்றதால் பேரையூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் சான்றிதழ்கள் வாங்க முடியாமல் அலைந்து திரியும் அவலம் ஏற்பட்டுள்ளது. பேரையூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த ஒருவாரமாக சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், விதவைச்சான்றிதழ், பட்டாமாறுதல் உள்ளிட்ட சான்றிதழ்கள் கேட்டு வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சான்றிதழ்களை விசாரணையில் உறுதி செய்ய துணைவட்டாட்சியர்  இல்லையெனக்கூறி, சான்றிதழ் பெற வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால், பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, ஒன்றியங்களைச்சேர்ந்த பொதுமக்கள் சான்றிதழ்கள் வாங்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர். சான்றிதழ் பெறுவதற்காக கடந்த ஒரு வாரமாக தாலுகா அலுவலகத்திற்கு அலைவதாக அவர்கள் கூறினர். இதுகுறித்து தாலுகா அலுவலர்கள் கூறுகையில், ``துணைவட்டாட்சியர் தேர்தல் பணிக்காக சென்று விட்டார். இதனால் இந்த பணியை செய்ய துணை வட்டாட்சியர் இல்லை’’ என்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ` கடந்த ஒரு வாரமாக சான்றிதழ் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். குறிப்பாக, இளைஞர்கள் சான்றிதழ் இல்லாமல் வேலை  வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சான்றிதழ்கள் வழங்கக்கூடாது என்று எந்த அறிவிப்பும் செய்யவில்லை. ஆனால், இதை காரணம் காட்டி எங்களை அலைக்கழிப்பது மிகவும் வேதனையாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதி பொதுமக்களுக்கு தடையின்றி சான்றிதழ்கள் வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தினர்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...