அரூர், மார்ச் 20: அரூர் சட்டப்பேரவை தொகுதியில், தொழிற்பேட்டை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில், தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், தர்மபுரி மாவட்டத்தில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளும் அடங்கும். இந்நிலையில், நேற்று திமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்காக தனியாக உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு, அரூர் தொகுதியில் தர்மபுரி- அரூர் சாலையானது மொரப்பூர் வழியாக நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும். தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை தரம் உயர்த்தப்பட்டு பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்படும். தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள துணை மின் நிலையத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். அரூரில் தொழில்பேட்டை தொடங்கப்படும்.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் தர்மபுரி-அரூர் சாலை மொரப்பூர் வழியாக நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை தரம் உயர்த்தப்பட்டு பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்படும். தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள துணை மின் நிலையத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பொம்மிடி ஊராட்சி வேப்பாடி அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டு இப்பகுதியில் விவசாயம் செழிக்கவும், குடிநீர் பற்றாக்குறை நீங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.வெளாம்பட்டி ஊராட்சி தென்பெண்ணை ஆற்றில் சென்னாக்கால் என்னுமிடத்தில் தடுப்பணை கட்டி மழைக்காலங்களில் ஓடும் உபரி நீர் வீணா கடலில் கலப்பதை தடுத்து எம்.வௌாம்பட்டி ஊராட்சி, மருதிப்பட்டி ஊராட்சி, சந்தப்பட்டி ஊராட்சி, கே.வேட்ரப்பட்டி ஊராட்சி, வடுகப்பட்டி ஊராட்சி, கொங்கவேம்பு ஊராட்சி, மோப்பிரிப்பட்டி ஊராட்சி, மாம்பட்டி ஊராட்சி ஆகிய ஊராட்சிகள் பயன் பெறும் வண்ணம் சென்னாக்கால் தடுப்பணை திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.