×

ஆலங்குடி அடுத்த வன்னியன்விடுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் மறியல் போராட்டம் காலிக்குடங்களுடன் திரண்டனர்

ஆலங்குடி, மார்ச் 15: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த அரையப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வன்னியன்விடுதி தொண்டைமான் குடியிருப்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைத்திருந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது.  இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் கடந்த ஒருவாரமாக அவதியடைந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சிலர் தங்களது வீடுகளுக்கு முறைகேடாக தனியாக குடிநீர் இணைப்பு எடுத்துள்ளதாகவும், இதனால், தங்கள் பகுதிக்கு வரும் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை என்றும், முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஊராட்சி செயலாளரர் வனிதாவிடம் முறையிட்டுள்ளனர்.

ஆனால், இதுகுறித்து ஊராட்சி செயலாளர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிகுடங்களுடன் ஆலங்குடி - அறந்தாங்கி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி போலீசார், விஏஓ ராமையா மற்றும் ஊராட்சி செயலாளர் வனிதா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்கள் குடிநீர் கிடைக்க உடனே நடவடிக்கை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து, ஆலங்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர்  உடனே மினி ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் ஆலங்குடி - அறந்தாங்கி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Girls ,protest ,Vanniyanadi Lake ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...