×

லாரி டிரைவரை அடித்து கொன்றதாக புகார் 6 ேபாலீசாரின் முன்ஜாமீன் மனு சேலம் நீதிமன்றத்தில் தள்ளுபடி

சேலம், மார்ச் 14:  திருட்டு வழக்கில் கைதான லாரி டிரைவரை அடித்து கொன்ற தாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் 6 போலீசாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் பாலசுப்பிரமணியம். இவர், கடந்த 2012ம் ஆண்டு இரும்பு லோடை ஏற்றிக்கொண்டு ஆத்தூர் வந்தார். அங்கு லாரியை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசில் லாரி உரிமையாளர், டிரைவர் பாலசுப்பிரமணியம் மீது கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அங்கிருந்த டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு, உடலில் காயம் இருந்ததால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, டிரைவர் பாலசுப்பிரமணியம் இறந்து போனார். இந்நிலையில், டிரைவர் பாலசுப்பிரமணியத்தை போலீசார் அடித்து கொன்று விட்டதாகவும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் அவரது உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து இந்த வழக்கு. சேலம் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. விசாரணை நடத்திய அதிகாரிகள், ஏத்தாப்பூர் இன்ஸ்பெக்டராக இருந்த கருணாநிதி, எஸ்எஸ்ஐ சண்முகம், ஏட்டுக்கள் சுப்பிரமணி, தாதன், ரவி, அசோகன், தங்கராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் இன்ஸ்பெக்டர் கருணாநிதியும், எஸ்எஸ்ஐ சண்முகமும் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.   இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு இன்ஸ்பெக்டர் தவிர மற்ற அனைவரும், சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு, நேற்று நீதிபதி மோகன்ராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, 6 பேரின் முன்ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து அவர்களை கைது செய்யும் முயற்சியில், சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags : truck driver ,court ,Muniyan Manu Salem ,
× RELATED சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும்...