×

கோடைக்கு முன்பே கடும் வறட்சி தொப்பூர் கணவாயில் குடிநீர் தட்டுப்பாடு

தர்மபுரி, மார்ச் 14: கோடைக்கு முன்பே கடும் வறட்சியால், தொப்பூர் கணவாய் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டோல்கேட் அருகே ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்ட வால்வு பகுதியில் இருந்து கசிந்து தேங்கும் நீரை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்து செல்கின்றனர். தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் மலைக்குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலைக்குன்றுகளை சுற்றி சிறிய கிராமங்கள் 20க்கும் மேற்பட்டவை உள்ளன. சனிச்சந்தை, தொம்பரகாம்பட்டி, வெள்ளக்கல், குறிஞ்சிநகர், டோல்கேட், வெள்ளக்கல், கட்டமேடு, பூரிக்கல், மேல்பூரிக்கல் ஜருகு, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூர், தண்டுகாரன்பட்டி, சேசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடிநீர் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றதால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புழக்கத்திற்கும் தண்ணீர் இல்லை. குடிக்கவும் சரியாக வருவதில்லை. இதனால் தொப்பூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் டூவீலர், சைக்கிளில் குடங்களை கட்டிக்கொண்டு தண்ணீர் கிடைக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

நேற்று தொப்பூர் குறிஞ்சிநகர் டோல்கேட் அருகே ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் வால்வு பகுதியில் இருந்து கசிந்து தேங்கிய நீரை பொதுமக்கள் போட்டிபோட்டுக்கொண்டு பிடித்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் கோடைகாலத்திற்கு முன்பாக வறட்சி ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நீலத்தடிநீர் அதலபாதாளத்திற்கு சென்றது. ஆழ்துளைகிணறுகளில் தண்ணீர் கிடையாது. இதனால் ஊராட்சிகளில் இருந்து ஆழ்துளை கிணற்றுநீர் சரியாக விநியோகம் செய்யப்படுவதில்லை. தண்ணீர் இல்லாமல் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. இதனால், காலையில் எழுந்ததும், தண்ணீர் கிடைக்கும் இடங்களை கண்டறிந்து தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். எனவே, அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் கிடைக்க போர்க்கால அடிப்படையில் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : shortage ,Thapoor ,
× RELATED நியாயவிலை கடைகளில் அரிசி தட்டுப்பாடு...