×

அரக்கோணத்தில் பரபரப்பு ரயில் நிலையத்தை பயணிகள் முற்றுகை சரியான நேரத்தில் ரயில்கள் இயக்காததை கண்டித்து

அரக்கோணம், மார்ச் 12: அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து சரியான நேரத்தில் ரயில்கள் இயக்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து தினமும் சென்னைக்கு 75க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக அரக்கோணத்தில் இருந்து காலை 6.30 மணியிருந்து 7.30 மணி வரை செல்லக்கூடிய புறநகர் மின்சார ரயில்கள் தொடர்ந்து காலதாமதாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், திருத்தணியிலிருந்து அரக்ேகாணம் வழியாக சென்னைக்கு செல்லும் மின்சார ரயில் நேற்று காலை வந்தது. இந்த ரயில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு செல்ல வேண்டும். ஆனால், ரயில் புறப்படுவதற்கு சிக்னல் கிடைக்காததால் அங்கேயே நிறுத்தப்பட்டது. ஆனால் அதற்குள் அரக்ேகாணத்திலிருந்து காலை 7.10 மணிக்கு சென்னைக்கு செல்லும் புறநகர் மின்சார ரயில் புறப்பட்டது. மேலும், திருத்தணி ரயில் காலதாமதமாக 7.25 மணிக்கு புறப்பட்டு சென்றது.

இதனால், ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் முதலில் செல்ல வேண்டிய ரயிலை முன்னதாக அனுப்பாமல் அதற்கு பிறகு அனுப்ப வேண்டிய ரயிலை முன்னதாக அனுப்பியதை கண்டித்து ரயில் இன்ஜின் முன் சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், ரயில் நிலையத்தையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தவலறிந்த ரயில் நிலைய அதிகாரிகள், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அரக்ேகாணம் ரயில் நிலையம் ஒட்டி சென்னை செல்லும் மார்கத்தில் டைமண்ட் கிராஸிங் பெண்ட் உள்ளது. அப்பகுதியில் 10 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்வதால், ரயில்கள் செல்வதற்கு காலதாமதம் ஆகிறது. இனி வரும் காலங்களில் அப்படி ஏற்படாது என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். போராட்டம் காரணமாக திருத்தணியிலிருந்து சென்னைக்கு செல்லும் மின்சார ரயில், அரக்கோணத்திலிருந்து சென்னை வேளச்சேரி செல்லும் மகளிர் சிறப்பு ரயில் மற்றும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் அரைமணி நேரம் காலதாமாக புறப்பட்டு சென்றது.

Tags : siege ,station ,Arakkonam ,passenger siege ,
× RELATED மேட்டூர் அனல் மின் நிலையத்தில்...