×
Saravana Stores

இலக்கியம்பட்டி அருகே சென்டர் மீடியன் சீரமைப்பு

தர்மபுரி, மார்ச் 8: தர்மபுரி- சேலம் மெயின் ரோட்டில் இலக்கியம்பட்டி அருகே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்டர் மீடியன் சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. தர்மபுரி அருகே சேஷம்பட்டியில் இருந்து தர்மபுரி நகரின் வழியாக செல்லும் நெடுஞ்சாலை நான்குரோடு வழியாக குண்டல்பட்டியில் மீண்டும் தேசிய நெடுஞ்சாலையை அடைகிறது. கடந்த 2012ம் ஆண்டு சேஷம்பட்டி முதல் குண்டல்பட்டி வரை நெடுஞ்சாலை 4 வாகனங்கள் செல்லும் அளவிற்கு அகலப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து சாலையின் நடுவே, சென்டர் மீடியன் வைக்கப்பட்டு வாகன போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் இலக்கியம்பட்டி அருகே சாலை மாரியம்மன் கோயில், அமைந்துள்ள பகுதியில் சாலை குறுகலாக இருந்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து சென்டர் மீடியனை சிறிது தள்ளி வைத்து, சாலையை சீரமைக்க மாநில நெடுஞ்சாலைதுறை முடிவு செய்தது. இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, சாலை மாரியம்மன் கோயிலின் எதிரே உள்ள போலீஸ்காரர் சிலை மற்றும் குதிரை சிலைகளை அகற்றி வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று சாலை மாரியம்மன் கோயில் அருகே சென்டர் மீடியன்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டது. இதற்காக பொக்லைன் மூலம் சென்டர் மீடியன் சிமெண்ட் பிளாக்குகளை தூக்கி சீரமைக்கும் பணி நடந்தது. சீரமைப்பிற்கு பின்னர் கோயில் அருகே சாலை இருபுறமும் அகலமாகியதால் நெரிசல் இன்றி போக்குவரத்து எளிதாகியது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா