×

வில்லியனூர் அருகே பக்கிரிபாளையத்தில் அரசு பள்ளிக்குள் புகுந்து மது அருந்தும் சமூக விரோதிகள்

வில்லியனூர், மார்ச் 6: புதுவை வில்லியனூர் அடுத்த தமிழகப் பகுதியான பக்கிரிப்பாளையம் அரசு பள்ளியில் உயரமான மதில்சுவர் அமைத்து காவலாளி நியமிக்க வேண்டுமென பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வில்லியனூர் அடுத்த தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் அருகே உள்ள பக்கிரிப்பாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளி கடந்த 1950ம் ஆண்டு துவங்கப்பட்டது. அப்ேபாது வழுதாவூர், காட்டேரிக்குப்பம், கலிங்கமலை, திருக்கனூர், செல்லிப்பட்டு, கண்டமங்கலம் உள்ளிட்ட புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். நாளடைவில் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டதால் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. தற்போது 350 மாணவர்கள் மட்டுமே அங்கு பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியில் காவலாளி இல்லாததால் விடுமுறை நாட்களில் இரவு ேநரங்களில் சமூக விரோதிகள் பள்ளியினுள் சென்று மது அருந்துதல், புகைபிடித்தல், திருட்டு என பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பள்ளியின் மதில்சுவர், வகுப்பறை ஜன்னல், கதவு, குடிநீர் தொட்டி உள்ளிட்டவற்றை சேதப்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி, அறிவியல் ஆய்வுக்கூடத்தையும் உடைத்து அங்கேயே மது அருந்துகின்றனர். இதனால் விடுமுறை முடிந்து பள்ளிக்கு ெசல்லும் மாணவர்கள் புத்தகத்தை எடுக்கும் முன்பு, பீர் பாட்டில்களை பொறுக்கும் நிலையுள்ளது. மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்களையும் உடைத்து திருடி செல்கின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் படிக்கும் போது, பைக்கில் வேகமாக பள்ளியின் உள்ளே அத்துமீறி சென்று வருகின்றனர். இதனால் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சமூக விரோதிகளின் அட்டூழியங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் சில மாணவர்களும் செல்போன் எடுத்துக் கொண்டும்,

மது அருந்தியும் பள்ளிக்கு வருகின்றனர். இவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால் மாணவர்களின் பெற்றோர்கள் வந்து, மகனை கண்டிக்கக் கூடாது என்று பிரச்னை செய்கின்றனர். சில நேரங்களில் வகுப்பறையை புறக்கணித்து விட்டு உடைக்கப்பட்டுள்ள மதில்சுவர் வழியே வெளியே சென்று விடுகின்றனர். இதனை தட்டிக்கேட்கும் ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், துப்புரவு பணியாளர்கள், அட்டண்டர்கள் உள்ளிட்ட ஊழியர்களும் இல்லாததால் ஆசிரியர்களே அனைத்து வேலைகளையும் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால், பள்ளிக்கு உடனடியாக காவலாளியை நியமித்து உயரமான மதில்சுவர் மற்றும் உட்கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்களும், மாணவர்களும் வலியுறுத்துகின்றனர்.

Tags : village ,government ,Pikiripalayam ,Villianur ,school ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...