×

தண்ணீரால் சூழப்பட்டிருந்த ஒகேனக்கல் ஜெகன் மோகினி குகைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

பென்னாகரம், மார்ச் 6:  ஒகேனக்கல்லில் தண்ணீரால் சூழப்பட்டிருந்த “ஜெகன்ேமாகினி குகை” வெளியே தெரிவதால், சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று கண்டு ரசிக்கின்றனர். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் உள்ளது. பெரிய மலைகளுக்கு இடையே காவிரி ஆறு பாய்ந்து வருவதையும், ஐவர்பாணி அருவி, மெயின் அருவி, முதலைப்பண்ணை ஆகியவற்றை காண்பதற்காக தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை காலம் மற்றும் விடுமுறை நாட்களில்  அதிகப்படியான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். போதிய மழையின்மை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்காதது ஆகியவற்றின் காரணமாக, கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால், அருவிகளில் தண்ணீரின்றி வறண்டு பாறைகளாக தென்படுகின்றன. இந்நிலையில், தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், ஆற்றுக்குள் மூழ்கி கிடந்த ஜெகன்மோகனி குகை, தற்போது வெளியே தெரிய தொடங்கியுள்ளது. தெலுங்கு பட இயக்குனர் விட்டலாச்சார்யா, தான் இயக்கிய ஜெகன்மோகினி படத்தின் படப்பிடிப்பை இங்கு நடத்தினார். அப்போது, பிரத்யேகமாக பாறையை குடைந்து, ஆவி வடிவில் ஜெகன்மோகினி குகை உருவாக்கப்பட்டது. இந்த குகைக்குள் 10 மீட்டர் தூரம் வரை உள்ளே சென்று  வரமுடியும். தற்போது, அப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், இந்த குகையை பரிசலில் இருந்தபடி ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர். சிலர் குகைக்குள் சென்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

Tags : cave ,Jegan Mohini ,Hogenakkal ,
× RELATED குளித்தலை அருகே ரயில்வே குகை...