×

திருப்பூர் முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோயிலில் மயான பூஜை

திருப்பூர், மார்ச் 6: திருப்பூர் முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோயிலில்  சிவராத்திரியை முன்னிட்டு மயான பூஜை நடந்தது.  திருப்பூர்  அடுத்துள்ள முத்தணம்பாளையத்தில், பழமையான அங்காளம்மன் கோயில் உள்ளது.  இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மேல்மலையனூர்  அங்காளம்மன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட அக்னி தீர்த்தத்தால்  அபிஷேகம் நடந்தது. இதைத்தொர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மயான பூஜை நடந்தது.  இதில் கோவில் அருகே உள்ள மயானத்தில், எலும்பு, மண்டை ஓடுகளால் மயான ருத்ரி  ரூபத்தில் அம்மன் வல்லான கண்டனை சம்ஹாரம் செய்தார். பின், கோவில்  அருளாளிகள், மண்டை ஓடு, எலும்புகளை ஏந்தி ஆக்ரோஷமாக ஆடினர். வல்லானகண்டனின்  குதிரை, யானை, காலாட்படைகளை அழிக்கும் வகையில, கோழி, ஆடு, பன்றி பலி  கொடுக்கப்பட்டன. அவற்றின் ரத்தம் கலந்த உணவை அருளாளிகள் ஆவேஷத்துடன்  உண்டனர். இதையடுத்து நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மன் சக்தி கும்பம்  எழுந்தருளிய, சக்தி விந்தை அழைப்பு நடந்தது. கத்தியின் கூர்மையான பகுதி  கும்பத்தின் மீது நேராக நிற்கும் அலகு தரிசனம் நடந்தது. இதில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை:  சிவராத்திரியை முன்னிட்டு, சிவன் கோயில்களில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜைகள் நடந்தன. உடுமலை போடிப்பட்டி சூர்யா கார்டன் காரிய சித்தி விநாயகர் கோயில் ஜம்புலிங்கேஸ்வரருக்கு நான்கு கால பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அதேபோல் உடுமலை தில்லைநகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோயிலிலும் நான்கு கால பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. உடுமலை காசிவிஸ்வநாதர் கோயில், கடத்தூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில், கொழுமம் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அமணலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள், ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags : Tirupur Muttanambalayam ,Angalamman ,
× RELATED மயிலாடுதுறை சித்தர்காட்டில் அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்