×

தண்டராம்பட்டு அருகே பரபரப்பு இருதரப்பினர் மோதலில் எஸ்ஐ, போலீஸ்காரர் காயம்

தண்டராம்பட்டு, மார்ச் 6: தண்டராம்பட்டு அருகே இருதரப்பினர் மோதலில் எஸ்ஐ, போலீஸ்காரர் காயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த பழையனூர் ஊராட்சி அத்திப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். திருவண்ணாமலை ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணை செயலாளராக உள்ளார். அதே கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவர் திமுக ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது மைத்துனர் மஞ்சுநாதன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு தமிழக அரசு சார்பில் பசுமை வீட்டிற்கான ஆணை வழங்கப்பட்டது. இதையறிந்த சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜனிடம் சென்று, திமுகவை சேர்ந்தவருக்கு பசுமை வீடு வழங்கக்கூடாது எனக்கூறி அந்த அரசாணையை ரத்து செய்தாராம். இதுதொடர்பாக அவருக்கும், பழனி, மஞ்சுநாதனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி தனது கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் அமைக்கப்படும் ஜல்லி சாலைக்கான பூமி பூஜையை சுப்பிரமணியன் தொடங்கினார். அப்போது அங்கு சென்ற மஞ்சுநாதன், ‘எனக்கு வீடு கொடுக்காமல் ரத்து செய்தாய். நீ எப்படி சாலை அமைக்கலாம்’ எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தாராம். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மஞ்சுநாதன் சுப்பிரமணியனை தாக்கினாராம். படுகாயம் அடைந்த சுப்பிரமணியன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையறிந்த சுப்பிரமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்றுமுன்தினம் மதியம் மஞ்சுநாதன் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்தார்களாம். அப்ேபாது இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் செங்கல்லால் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். இதற்கிடையில் தகவலறிந்து சம்பவ இடம் வந்த வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீஸ்காரர் பாண்டியன் ஆகியோர் தகராறை தடுக்க முயன்றனர். அப்போது செங்கற்கள் வீசியதில் சப்-இன்ஸ்பெக்டர் சேகருக்கும், போலீஸ்காரர் பாண்டியனுக்கும் காயம் ஏற்பட்டது. தகராறில் படுகாயம் அடைந்த இருதரப்பை சேர்ந்த 8 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : policeman ,clash ,neighbors ,Tunderabad ,
× RELATED நடப்புத் தொடரில் முதல் மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்