×

நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் வியாபாரிகள் நகரில் தண்ணீர் திருட்டு

திருப்பூர்,மார்ச்  1:  நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும்  வியாபார நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.திருப்பூர்  மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சராசரி அளவுக்கு கூட மழை பெய்யாததால்,  நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு இறங்கி விட்டது. ஊரக பகுதிகளில் 600 அடியில்  கிடைக்கும் நிலத்தடி நீர், தற்போது வெகுவாக குறைந்துள்ளது. ஆயிரம் அடி  ஆழத்துக்கு ஆழ்குழாய் அமைத்தால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  வணிக நோக்கில் இயங்கும் லாரிகள், விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீரை  விலைக்கு வாங்கி, கூடுதல் விலைக்கு விற்று லாபம் ஈட்டி வருகின்றன.  மாநகராட்சிக்கு உட்பட நகரப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்தும்  தண்ணீர் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. புதிய குடியிருப்புகள்  உருவாகும்போது, அப்பகுதியில் தண்ணீர் வசதி குறைவாக இருக்கும் என்பதால்,  தேவையை பூர்த்தி செய்வதற்காக, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படுகின்றன. சில  பகுதிகள் நீர்ப்பாங்கான இடமாக இருப்பதால், ஆண்டு முழுவதும் தண்ணீர்  கிடைக்கிறது. வீட்டு தேவை போக, மினி வேன், லாரிகளுக்கு தண்ணீர் விற்பனை  செய்வதும் அதிகரித்து வருகிறது.

கிராமப்புறங்களை காட்டிலும், திருப்பூர்  மாநகராட்சி மற்றும் ஒட்டியுள்ள ஊராட்சிகளில் தண்ணீர் விற்பனை என்பது, ‘சைடு  பிஸினஸ்’ போல் மாறியுள்ளது. மூன்றாவது திட்டம் மூலம் கூடுதல் தண்ணீர்  கிடைத்தாலும், நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பதே அதிகம் நடக்கிறது. ஆகவே  எதிர்கால நலன் கருதி, குடியிருப்புகள் மற்றும் விவசாய கிணறுகளில் இருந்து  தண்ணீர் உறிஞ்சி விற்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள்  எதிர்பார்க்கின்றனர். வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி  அமைப்புகளை ஒருங்கிணைத்து, தண்ணீர் திருட்டை தடுக்கவும், நிலத்தடி நீர்  வளத்தை பாதிக்கும் தண்ணீர் விற்பனையை தடுக்கவும், மாவட்ட நிர்வாகம்  போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள்  வலியுறுத்தியுள்ளனர்.

Tags : merchants ,city ,
× RELATED தர்மபுரியில் புளி வணிகர்கள் நலச்சங்க வெள்ளி விழா