×

ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை கர்ப்பப்பையில் 22 கிலோ கட்டி அகற்றம்: டீன் பொன்னம்பல நமசிவாயம் தகவல்

சென்னை: ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்த 22 கிலோ கட்டியை அகற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவினர் சாதனை படைத்து உள்ளதாக மருத்துவமனை டீன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் அட்சயா ஜெனிபர் (41). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவரிடம் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டு வயிற்றுவலியால் துடித்தார். அங்குள்ள பல தனியார் மருத்துவமனையில் அட்சயா சிகிச்சை பெற்றும் வந்தார். பின்னர் பொருளாதார சூழ்நிலை காரணமாக அவர் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் அவருக்கு கடந்த பல மாதங்களாக வயிறு வீக்கம் அதிகரித்து மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் அட்சயாவால் சரியாக உணவருந்த முடியவில்லை. அங்குள்ள மருத்துவர்களின் பரிந்துரைபேரில், கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அட்சயா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகள் செய்து பார்த்ததில், அட்சயாவின் கர்ப்பப்பையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு செப்டம்பர் 30ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது.
 பேராசிரியர்கள் காயத்ரி முத்துகுமரன், பாலமுருகன், சிவகுமார் தலைமையில் மருத்துவர்கள் வெற்றிகரமாக கர்ப்பப்பை கட்டியை அகற்றினர். இதன் பிறகு அட்சயாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்தார். இதைத் தொடர்ந்து, அவரை கடந்த சில நாட்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  மருத்துவமனை டீன் பொன்னம்பல நமசிவாயம் கூறுகையில், ‘‘அட்சயா ஜெனிபர் என்ற பெண்ணின் கர்ப்பப்பை கட்டி காரணமாக அறுவை சிகிச்சை மருத்துவ குழுவினர் 5 மணி நேரம் போராடி, அவரது கர்ப்பப்பையில் இருந்து 22 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றியுள்ளனர்.

பின்னர் அவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவருக்கு ஏற்கெனவே இருந்த மூச்சு திணறல் மற்றும் வயிறு வீக்கமும் சரிசெய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் அவருக்கு பல லட்சம் செலவாகி இருக்கும். இங்கு தமிழக முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அட்சயா ஜெனிபருக்கு இலவசமாக செய்யப்பட்டது’’ என்றார். அவருடன் மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.

Tags : Stanley Government Hospital ,
× RELATED குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர் மீது வழக்குப்பதிவு