×

செயல்படுத்த மக்கள் முன்வராததால் முடங்கியது சாண எரிவாயு திட்டம்

திருவள்ளூர், பிப். 28: திருவள்ளூர் மாவட்டத்தில், மரபுசாரா எரிசக்தியை மேம்படுத்த அதிகாரிகள் இல்லாததால் சாண எரிவாயு கலன் அமைக்கும் திட்டம் முடங்கியுள்ளன. காஸ் தட்டுப்பாட்டைக் குறைக்கவும், புவி வெப்பமாவதைத் தடுக்கவும், பெட்ரோலியப் பொருட்ளுக்கு மாற்றாக சிம்னி விளக்கு முதல் காஸ் ஸ்டவ், மின் விளக்குகள் மற்றும் மின் மோட்டார்களை இயக்க சாண எரிவாயு கலன் அமைக்க, மத்திய அரசின் மரபு சாரா எரிசக்தித்துறை ₹8,000 மானியம் வழங்கி, ஊக்குவித்து வருகிறது. இதற்காக, மாவட்ட அளவில் பிடிஓ., அந்தஸ்தில் ஒரு அதிகாரியும், வட்டாரத்தில் ஒரு அதிகாரியும் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், வெவ்வேறு திட்டங்களுக்கு மாற்றப்பட்டதால், இத்திட்டம் செயலற்று முடங்கியுள்ளது. மத்திய அரசு ரூ.8,000 வரை மானியம் வழங்கியும், சாண எரிவாயுத் திட்டத்தை செயல்படுத்த மக்கள் முன்வராததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘’இது மத்திய அரசின் திட்டமாகும். இதற்காக, மத்திய அரசு ₹8,000 மானியம் வழங்குகிறது. இரும்பு டிரம், பைபர் டிரம், பெட்ரோ சிமென்ட் வடிவம் ஆகிய வடிவங்களில் அமைக்கலாம்.

இதற்கு, ₹22 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவாகும். கேரளாவை போன்று தமிழகத்திலும் மாநில அரசும் மானியம் வழங்கினால், இத்திட்டத்தை மேம்படுத்த முடியும்’’ என்றார். திட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில்,’சமையலுக்கு காஸ் பயன்பாட்டில் அதிக ஆர்வம் காட்டுவதால், சாண எரிவாயு திட்டத்திற்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் வேறு திட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இத்திட்டத்திற்கென எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை’’ என்றார்.

Tags :
× RELATED முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு