×

தலைமை செயலருக்கு சாலை பாதுகாப்பு கமிட்டி கடிதம் ஹெல்மெட் அணிவதில் யாருக்கும் விதிவிலக்கல்ல

புதுச்சேரி, பிப். 27: ஹெல்மெட் அணிவதில் இருந்து யாரும் விதிவிலக்கல்ல என உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கமிட்டியின் செயலர் புதுச்சேரி தலைமை செயலருக்கு பரபரப்பு கடிதம் அனுப்பியுள்ளார். இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு கவர்னர் மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை கண்காணிக்கும் வகையில் நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமைமையில், உறுப்பினர்கள் சுந்தர், நிஷாமிட்டல் ஆகியோர் அடங்கிய சாலை பாதுகாப்பு கமிட்டியும் அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியானது, வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை உறுதிபடுத்தும் வகையிலான மாநில அரசுகள் நடவடிக்கைகளை கண்காணிக்கும். இதற்கிடையே புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கிரண்பேடி தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தார். அவர் டிஜிபி சுந்தரி நந்தாவை அழைத்து, ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.இதுவரை ஹெல்மெட் அணியாமல் சென்ற 40 ஆயிரம் பேரின் வாகன எண்ணை பதிந்து நீதிமன்றம் வழியாக நோட்டீஸ் அனுப்ப காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளாத முதல்வர் நாராயணசாமி, படிப்படியாக ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துங்கள், வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி செய்யக்கூடாது. ஒரே நாளில் மக்களிடம் மாற்றம் கொண்டுவந்துவிட முடியாது என தெரிவித்தார். இந்த விவகாரம் கவர்னர்- முதல்வர் இடையே மோதலாக வெடித்து, கவர்னர் மாளிகை முன் நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்தும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது.

இதற்கிடையே சாலை பாதுகாப்பு கமிட்டியின் செயலர் எஸ்டி பங்கா தலைமை செயலர் அஸ்வனிகுமாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி வெளியான செய்திகள் அடிப்படையில், புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டம் முறையாக கடைபிடிக்கவில்லை என தெரியவந்துள்ளது. எனவே கமிட்டியானது, சட்டத்தை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும். 1988 மோட்டார் வாகன சட்டம் பிரிவு 129ன்படி ஹெல்மெட் அணிவதில் இருந்து (டர்பண் அணியும் சீக்கியர்களை தவிர்த்து) யாரும் விதிவிலக்கல்ல.
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துதல் குறித்த அறிக்கையை ஒவ்வொரு காலாண்டிலும் மாநில அரசு கமிட்டியிடம் தாக்கல் செய்யும். அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அறிக்கை அனுப்பப்படவில்லை. எனவே சாலை பாதுகாப்பில் ஆர்வம் காட்டும் வகையில், ஹெல்மெட் அமல்படுத்துதல் குறித்த அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோருக்கு இக்கடிதத்தை அனுப்பியுள்ளார். காவல்துறை இதன்மீது நடவடிக்கைகளை உடனே துவங்க வேண்டுமென கிரண்பேடி குறிப்பாணை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதுச்சேரியில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றநிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

Tags : Chief Secretary ,Road Safety Committee ,anyone ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...