×

அச்சத்தில் ஊழியர்கள், பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் விஏஓ அலுவலகம்

சேத்தியாத்தோப்பு, பிப். 27:  சேத்தியாத்தோப்பு அருகே துரிஞ்சி கொல்லையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சேத்தியாத்தோப்பு அருகே உள்ள துரிஞ்சிக் கொல்லை கிராமத்திலும், அதன் சுற்றுப்புற பகுதி கிராமமான மது வானைமேடு கிராமத்திலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகளும் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு கிராம பொதுமக்கள் தங்களின் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாரிசு சான்று, குடும்ப அட்டை பெறுவதற்கு மற்றும் பட்டா, சாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ் போன்ற அரசு சான்றிதழ்களை பெறுவதற்கும் துரிஞ்சிகொல்லை விஏஓ அலுவலகத்துக்கு வருகின்றனர். மேலும் நில அளவை சம்பந்தமான பணிகளுக்கும், அரசின் திட்ட பணிகளுக்காகவும் இந்த அலுவலகத்திற்கு தான் வந்து செல்கின்றனர். தினமும் மக்கள் பயன்படுத்தும் இந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கடந்த சில ஆண்டாக பராமரிக்கப்படாமலும், சீரமைக்கப்படாததாலும் அந்த கட்டிடத்தின் சுவர்கள் சிதிலமடைந்து ஆங்காங்கே விரிசல் விட்டு வருகின்றது.  கட்டிடத்தின் மேற்கூறைகள் பெயர்ந்து விழுந்து வருகின்றது. இந்த கட்டிடமானது சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இதனால் இதில் பணியாற்றி வரும் ஊழியர்கள், தினமும் வந்து செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே வந்து செல்கின்றனர். இந்த கட்டிடத்தின் நிலை குறித்தும் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இடிந்து அரசு ஊழியர்கள் மீதோ, பொதுமக்களின் மீதோ விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் சம்பவம் நடக்கும் முன்பே இந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு விரைந்து மாவட்ட நிர்வாகம் புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : VOO Office ,collapse ,
× RELATED தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த...