×

மேம்பாலம் திறப்பு விழாவுக்கு இடம் தேடும் அமைச்சர்கள்

ஈரோடு, பிப். 27:  ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் ரூ.58.54 கோடி மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை 28ம்தேதி முதல்வர் எடப்பாடி பழனி–்ச்சாமி திறந்து வைக்க உள்ளார். இதற்காக, ஈரோடு பிரப்ரோடு சி.எஸ்.ஐ. பள்ளி மைதானம் தேர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே, பெரியமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை சி.எஸ்.ஐ. நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், இங்கு விழா நடத்த பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், உடனடியாக இடத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால், வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லை என காரணம் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, வாகனங்களை நிறுத்துவதற்கும், பொதுமக்கள் வந்து செல்லவும் எளிதாக இருக்க கூடிய வ.உ.சி.பூங்கா மைதானத்தை தேர்வு செய்தனர். உடனே பூஜை போடப்பட்டு பந்தல் அமைக்கும் பணிகள் நடந்தது. ஆனால், இந்த பூங்காவில் விழா நடத்தினால் ஆட்சிக்கு முடிவு வந்து விடும் என்பதற்காக நேற்று திடீரென பந்தல் அமைக்கும் பணிகளை நிறுத்தும்படி கூறினர். இதனால் விழா நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

 இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5.30 மணியளவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மேம்பாலத்தில் மீண்டும் ஆய்வு செய்து விட்டு விழா நடத்தும் இடத்தை தேர்வு செய்வது குறித்து ஆலோசித்தனர்.பின்னர், பிரப்ரோட்டில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் ரோட்டில் மேடை அமைத்து விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். அரசு தலைமை மருத்துவமனை அருகே எம்.ஜி.ஆர் சிலை மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துவிட்டு கார் மூலம் பிரப்ரோடு வழியாகவே விழா மேடைக்கு வரும் வகையில் மேடை அமைக்க திட்டமிட்டுள்ளனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து பிரப்ரோடு வழியாக போக்குவரத்தை தடை செய்து நடுரோட்டிலேயே மேடை அமைக்க உள்ளனர். மூன்றாவது முறையாக இடத்தை மாற்றியுள்ள நிலையில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திலாவது விழா நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Tags : Ministers ,location ,opening ceremony ,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...