×

ஆட்டின் தலை, கால்களை தீயில் வாட்டுவதால் சந்தைப்பேட்டையில் சுற்றுசூழல் பாதிப்பு

தர்மபுரி, பிப்.26: சந்தைப்பேட்டை ஆடு அறுக்கும் மையத்தில், ஆட்டின் தலை, கால்களை தீயில் வாட்டுவதால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தர்மபுரி சந்தைபேட்டையில் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமானோர் பல்வேறு சிகிச்சை, பரிசோதனைக்காக வந்து செல்கின்றனர். மேலும், கர்ப்பிணி பெண்கள் பிரசவத்துக்கும் வந்து செல்கின்றனர். இந்த ஆரம்ப சுகாதாரம் நிலையத்தின் பின்புறம் தர்மபுரி நகராட்சி ஆடு அறுக்கும் மையம் உள்ளது. இங்கு தினமும் 100க்கணக்கான ஆடுகள் அறுக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தநிலையில், இந்த மையத்தின் உள்ளே சிலர் அனுமதியின்றி ஆடுகளின் கால்கள், தலைகளை தீயில் வாட்டி சுடுகின்றனர். இதற்காக மண்ணால் பிரத்யேக அடுப்பும் மையத்தின் உள்ளே கட்டப்பட்டுள்ளது. ஆடுகளின் கால் தலைகளை தீயில் வாட்டுவதால் ஏற்படும் துர்நாற்றத்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு சிகிச்சை வருபவர்கள் மற்றும் பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள் அவதியடைந்து வருகின்றனர்.

இறந்த ஆட்டின் ரத்த வாடையுடன் கருகிய வாடையும் வீசி வருவதால், அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தவிர, ஆடு அறுக்கும் மையத்தினை தினமும் தண்ணீரில் சுத்தம் செய்வதில்லை. பல முறை புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி, ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள ஆடு அடிக்கும் தொட்டியை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். அதுவரை அனுமதியின்றி ஆடு அறுக்கும் மையத்தில், அத்துமீறி ஆட்டின் தலை, கால்களை தீயில் சுடுபவர்கள் மீதும், துணையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : head ,
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...